அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் அதிரடி பதிலடி: அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல்!

Su.tha Arivalagan
Jul 09, 2026,04:02 PM IST

பஹ்ரைன் : மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் ராணுவம் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது. குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ இலக்குகளைக் குறிவைத்து ஈரான் ராணுவம் இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.


கடந்த சில நாட்களாகவே அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் தற்போது களம் இறங்கியுள்ளது. அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்காவின் முக்கிய ராணுவக் கட்டமைப்புகளை ஈரான் ராணுவம் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கியிருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரான் ராணுவம் நடத்திய இந்த ஒருங்கிணைந்த தாக்குதலில் அமெரிக்காவின் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குவைத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன 'பேட்ரியாட்' (Patriot) ஏவுகணைத் தடுப்பு அமைப்பை ஈரான் ராணுவம் தகர்த்துள்ளது. அமெரிக்காவின் வான் பாதுகாப்புக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.




அதே போல் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் மிக முக்கிய சாட்டிலைட் ஆண்டெனா மையத்தை (Satellite Antenna Center) குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அமெரிக்கப் படைகளின் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.


பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் (Fuel Storage Depots) மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டு, வானுயரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ள வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கை ஓங்கியிருப்பதைத் தடுக்கும் நோக்கில், ஈரான் இந்த அளவிற்குத் துணிச்சலான தாக்குதலை நடத்தியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாப் பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. 


ஈரானின் இந்த அதிரடி பதிலடிக்கு அமெரிக்கா மீண்டும் எந்த மாதிரியான ராணுவ நடவடிக்கையை எடுக்கப் போகிறது? என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவுக்கு வராவிட்டால், இது ஒரு முழு அளவிலான போராக மாறக்கூடும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.