இஸ்ரேல் - அமெரிக்காவுக்கு பயங்கரமான பதிலடி காத்திருக்கு.. ஈரான் மீண்டும் எச்சரிக்கை
டெஹரான்: இந்தியப் பெருங்கடலில் ஈரான் மாலுமிகள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிரிகளுக்கு பயங்கரமான பதிலடி காத்திருக்கிறது என்று ஈரான் கடற்படைத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இம்மாத தொடக்கத்தில், இலங்கைக் கடற்கரைக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் ஈரானின் ஐரிஎஸ் தேனா என்ற போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டார்பிடோ தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. இதில் சுமார் 80-க்கும் மேற்பட்ட ஈரான் மாலுமிகள் உயிரிழந்தனர்.
இந்தக் கப்பலானது, இந்தியாவில் நடந்த கடற்படை நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு, தனது நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. விருந்தினராக கலந்து கண்ட போர்க்கப்பல் என்பதால் ஆயுதங்கள் இல்லாமல் அதில் போர் வீரர்கள், மாலுமிகள் இருந்தனர். இந்த நிலையில் இந்தியப் பெருங்கடலில் சர்வதேச கடல் எல்லைக்குள் கப்பல் வந்தபோது, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரான் போர்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்தனர்.
தாக்குதலில் உயிர் பிழைத்த சுமார் 32 மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு காலி பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தத் தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியப் பெருங்கடலில் ஈரான் மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் விதமாக, எதிரிகளுக்கு பயங்கரமான பதிலடி காத்திருப்பதாக ஈரான் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷாராம் இரானி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அட்மிரல் இரானி, எதிரியின் குற்றத்தை நாங்கள் மறக்க மாட்டோம். எங்கள் தியாகிகளின் இரத்தத்திற்கு நிச்சயம் பழிவாங்குவோம். எதிரி எதிர்பார்க்காத நேரத்தில், எதிர்பாராத இடத்திலிருந்து பயங்கரமான தாக்குதல்கள் மூலம் அவர்களைத் தண்டிப்போம் என்று கூறியுள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை ஒரு போர்க் குற்றம் என்று வர்ணித்துள்ளது. இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக வந்த அமைதிப் பயணத்தின் போது, சர்வதேச விதிகளை மீறி அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி தலைமையிலான அரசு, இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதில் உறுதியாக உள்ளது. ஏற்கனவே வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் கடற்படைத் தளபதியின் இந்த அறிவிப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன மாதிரியிான தாக்குதலை ஈரான் நடத்தப் போகிறது என்ற பரபரப்பும் அச்சமும் கூடியுள்ளது. காரணம், ஈரான் தொடர்ந்து தீரத்துடன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலும், அமெரிக்காவும் நிலை குலைந்து போயுள்ளன. சீக்கிரமே ஈரானை சீர்குலைத்து விடலாம் என்று அமெரிக்கா இஸ்ரேல் போட்ட கணக்கு தப்புக் கணக்காகி வருவதால், ஈரான் பதிலடியும் அதி பயங்கரமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.