Khamenei Assasination: விரைவில் வரலாறு காணாத கொடூரத் தாக்குதல்.. ஈரான் எச்சரிக்கை

Su.tha Arivalagan
Mar 01, 2026,10:00 AM IST
டெஹரான்: ஈரான் நாட்டின் சுப்ரீம் தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்ட விவகாரத்திற்கு ஈரான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கமேனியின் படுகொலைக்கு சரியான பதிலடி தருவோம். வரலாற்றில் இல்லாத அளவிலான கொடூரமான தாக்குதலை எந்த நேரத்திலும் தொடங்குவோம் என்றும் அது எச்சரித்துள்ளது.

இந்தப் புதிய எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு கூடியுள்ளது. என்ன மாதிரியான தாக்குதலை ஈரான் மேற்கொள்ளப் போகிறது. அணு ஆயுதம் ஏதேனும் பயன்படுத்தப் போகிறார்களா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ஈரானின் மிக உயரிய தலைவரான அயதுல்லா அலி கமேனி, சமீபத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்குப் பழிவாங்கும் விதமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் சூளுரைத்துள்ளது.



கமேனியின் மறைவுக்குப் பிறகு, ஈரான் தரப்பிலிருந்து வெளிவந்துள்ள அறிக்கையில், இது வெறும் சாதாரண தாக்குதலாக இருக்காது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இதுவரை பார்த்திராத வகையில் ஒரு மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டின் தலைவரை இழந்ததற்கு ஈடாக, எதிரிகள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் ஈரான் ராணுவத் தளபதிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே லெபனான் மற்றும் காசா பகுதிகளில் மோதல்கள் நீடித்து வரும் நிலையில், ஈரானின் இந்த நேரடி எச்சரிக்கை உலக நாடுகளைக் கவலை அடையச் செய்துள்ளது.

ஈரானின் மிரட்டலைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள அமெரிக்கப் படைகள் தங்களது பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இஸ்ரேல் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வான் பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளது இஸ்ரேல்.