அடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள், உட்கட்சி குழப்பம்.. பலம் இழக்கிறதா அதிமுக-பாஜக கூட்டணி?

Su.tha Arivalagan
Sep 04, 2025,12:40 PM IST

சென்னை : அதிமுக-பாஜக கூட்டணியில் பெரிய கட்சிகள் என்றால் அது அதிமுக.,வும் பாஜக.,வும் தான். மற்றவை அனைத்தும் சிறிய கட்சிகள் தான். அதிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறி விட்டார். இவர் வெளியேறிய சில நாட்களிலேயே, நேற்று அமமுக தலைவர் டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். 


மற்றொரு புறம் அதிமுக-பாஜக கூட்டணியில் இருக்கிறதா, இல்லையா என தெரிவிக்காமல் குழப்பத்திலேயே அனைவரையும் வைத்திருந்த தேமுதிக.,வில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிச்சாமி தங்களை முதுகில் குத்தி விட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். மற்றொரு புறம் அதிமுக கூட்டணிக்கு வரும் என பெரியதும் எதிர்பார்க்கப்பட்ட பாமக, இதுவரை கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் அப்பா-மகன் பிரச்சனையே முடிவில்லாமல் போய் கொண்டிருக்கிறது. 


குழப்பத்தில் அதிமுக கூட்டணி




அதிமுக-பாஜக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வர உள்ளன. பெரிய கட்சி ஒன்று கூட்டணியில் இணைய வர உள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமியும், அமித்ஷாவும் கூறி வந்தார்கள். ஆனால் இதுவரை எந்த கட்சியும் வந்தபாடில்லை. புதிய கட்சிகள் தான் வரவில்லை என்று பார்த்தால், அதற்கு நேர்மாறாக ஏற்கனவே இருக்கும் கட்சிகளும் கூட்டணியில் இருந்து விலகி சென்று கொண்டிருக்கின்றன. கூட்டணியில் தான் இப்படி என்றால் கட்சிக்குள்ளும் பல குழப்பம் உள்ளது.


அதிமுக.,வில் செங்கோட்டையன் மீண்டும் போர் கொடி தூக்கிக் கொண்டிருக்கிறார். தனது ஆதரவாளர்களை திரட்டி, ஆலோசனை நடத்தியவர், செப்டம்பர் 05ம் தேதி மனம் திறக்க போகிறேன் என்று வேறு சொல்லி உள்ளார். அதிமுக முன்னாள் எம்.பி.,சத்யபாமாவும் சென்று அவருக்க ஆதரவு தருவதாக சொல்லி விட்டு வந்துள்ளார். அதிமுக கட்சிக்குள் தான் இப்படி என்று பார்த்தால், தமிழக பாஜக.,விலும் உட்கட்சி பூசல் அதிகரித்து வருவதாக அமித்ஷாவே தமிழக பாஜக தலைவர்களை டில்லிக்கு அழைத்து எச்சரித்து அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. பாஜக தமிழ்க முன்னாள் தலைவர் அண்ணாமலை வேறு டில்லியில் தமிழக தலைவர்களுடன் செல்லாமல் தவிர்த்துள்ளார். ஏற்கனவே பாஜக.,விற்குள் அண்ணாமலை தரப்பினர் இன்னும் எடப்பாடி பழனிச்சாமியையும், அதிமுக.,வையும் ஏற்காத நிலைபாட்டில் தான் உள்ளனர்.


எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்காதவர்களும் இன்னும் அதிமுக, பாஜக என இரு கட்சிகளுக்குள்ளும் இருக்கிறார்கள். இதனால் அதிமுக-பாஜக கூட்டணியே தேர்தல் வரை நீடிக்குமா என்ற சந்தேகம் வேறு பலருக்கும் இருந்து  கொண்டிருக்கிறது. இப்படி அதிமுக-பாஜக கூட்டணி ஏகப்பட்ட இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. 


பிடிவாதம் பிடிக்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி




இவை அத்தனைக்கும் காரணம் எடப்பாடி பழனிச்சாமியின் பிடிவாத போக்கு தான் என அதிமுக வட்டாரத்தில் பலரும் பேசிக் கொள்கிறார்கள். டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் தரப்பை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி தற்போது தயாராக இல்லாததும், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள அவர் தயாராக இல்லாததுமே இத்தனை குழப்பங்கள், கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டிருப்பதற்கும் காரணமாக சொல்லப்படுகிறது. 


ஆனால் இதனால் எல்லாம் அதிமுக கூட்டணி பலம் இழந்து விட்டதா என்று கேட்டால் நிச்சயமாக கிடையாது. அதிமுக.,வை பொருத்தவரை, அமமுக கூட்டணியில் இருந்து விலகியது வேண்டுமானால் கொஞ்சம் சீரியசான விஷயமாக எடுத்துக் கொள்ளலாம். காரணமாக 2021 சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கள் பிரிந்து அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு அமமுக ஒரு முக்கிய காரணம். ஆனால் செங்கோட்டையன், ஓபிஎஸ் போன்றவர்களுக்கு பெரிதாக ஆதரவாளர்கள் என்று யாரும் இல்லாததால் அவர்களை கட்சி பெரிதாக எடுத்துக் கொள்ளாது. கோபிசெட்டிபாளையம், பெரியகுளம் தொகுதிகளில் ஓபிஎஸ், செங்கோட்டையனின் ஆதரவு இல்லாமலேயே ஓட்டுக்களை அள்ளுவதற்கு அதிமுக வேறு சில யுக்திகளை கைவசம் வைத்துள்ளதாம்.


அதிமுகவின் திட்டம்




மேலோட்டமாக பார்த்தால் அதிமுக கூட்டணியில் யாரும் இல்லை. பலம் இழந்து காணப்படுகிறது. திமுக கூட்டணியில் தான் நிறைய கட்சிகள் உள்ளது என தோன்றலாம். ஆனால் உளவுத்துறை அளித்துள்ள ரிப்போர்ட் படி உண்மை நிலவரம் வேறு என்று அதிமுக தரப்பில் கூறிக் கொள்கிறார்கள்.


அதாவது எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்யும் இடங்களில் அதிமுக.,வின் செல்வாக்கு அதிகரித்தும், திமுக.,வின் செல்வாக்கு சரிந்தும் வருகிறதாம். நாளுக்கு நாள் மக்களிடம் திமுக அரசு மீதான அதிருப்தி அதிகரித்து வருவதால் தேர்தலில் திமுக.,வின் தோல்வி ஏறக்குறைய உறுதியாகி விட்டது அவர்களுக்கே நன்கு தெரியும் என்று அதிமுகவினர் கூறுகிறார்கள். 


அதனால் தான் எதிரி கூட்டணியான அதிமுக-பாஜக கூட்டணியில் பல குழப்பங்களை ஏற்படுத்தி, கூட்டணியையும், கட்சிகளையும் பிளக்கும் வேலையை திமுக செய்து வருகிறதாம். இப்படி அதிமுக தரப்பில் ஒரு காரணம் முன்வைக்கப்படுகிறது. அதிமுக பலம் இழப்பது போல் மாய தோற்றத்தை ஏற்படுத்தி, மக்களை குழப்பம் திட்டம் தான் இது என்றும் அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது.


எது நிஜம்னு தெரியலை.. ஆனால் 2026 தேர்தலுக்குப் பிறகுதான் யார் பலசாலி, யாரெல்லாம் வீழந்தார்கள் என்பது தெரிய வரும்.