ADMK metldown: வேகமாக கரையும் அதிமுக.. மொத்தம் 47 - இபிஎஸ் 27; வேலுமணி 17; ராஜினாமா 3!

Su.tha Arivalagan
May 25, 2026,05:01 PM IST

சென்னை : அதிமுக.,வில் அடுத்தடுத்து நடைபெறும் மாற்றங்கள், அக்கட்சி பலவீனமடைந்து கரைய துவங்கி விட்டது என்பதையே காட்டுகிறது. இதைக் கண்டு அதிமுக தொண்டர்கள் கலக்கமும், வேதனையும் அடைந்துள்ளனர்.


தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அதிமுக, வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் இந்த தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக.,விற்கு ஏற்பட்ட இந்த பின்னடைவு அக்கட்சியின் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தேர்தல் தோல்வியால் பெற்ற அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள், கட்சி இரண்டு அணிகளாக பிளவு பெற்றது.


இபிஎஸ் தரப்பு ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி-சி.வி.சண்முகம் தரப்பு ஒரு அணியாகவும் பிரிந்தது. அதிமுகவில் இது போல் பிளவு ஏற்படுவதும், பிறகு அனைவரும் ஒன்றிணைந்து கட்சி மீண்டும் பலம் பெற்று திரும்பி வருவது ஒன்றும் புதியது கிடையாது. அதனால் வழக்கமாக நடக்கும் ஒரு பிளவு தான் என ஆரம்பத்தில் அனைவரும் அமைதி காத்தனர். ஆனால் சட்டசபையில் தவெக.,அரசுக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள் 25 பேர் ஓட்டளித்தனர். இதனால் அவர்கள் அனைவரின் கட்சி பதவிகளையும் பறித்தார் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. 




கட்சி பதவிகள் பறிக்கப்பட்ட பிறகு ஒன்றிரண்டு பேர் மீண்டும் இபிஎஸ்.,ஐ சந்தித்து, அவர் பக்கம் சென்றனர். இருந்தாலும் தவெக.,விற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, அமைச்சரவையில் இடம்பிடிக்க எஸ்.பி.வேலுமணி தரப்பு பெரும் முயற்சி செய்தது. ஆனால் முதல்வர் விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் அதிமுக.,வினருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்தவர்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர். தற்போது எந்த பக்கம் செல்வது என தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த நிலையில் இன்று, எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 3 அதிமுக., எம்எல்ஏ.,க்கள் தங்களின் எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக.,வில் சென்று இணைந்தனர். 5 பேர் இபிஎஸ்.,ஐ சந்தித்து பேசி உள்ளனர். இதனால் தற்போது இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கை 27 ஆகவும், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. கட்சி இரு அணிகளாக பிரிந்துள்ளது மட்டுமின்றி, சட்டசபையில் அதிமுக.,வின் பலம் 44 ஆக குறைந்துள்ளது. 


மொத்தத்தில் இன்று நடந்த எதுவுமே அதிமுகவுக்கு நல்லது இல்லை என்பதால் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.


எஸ்.பி.வேலுமணி தரப்பில் மீதமுள்ள 17 எம்எல்ஏ.,க்களும் என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்தே, சட்டசபையில் கட்சியின் பலமும், எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் எதிர்காலமும் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. துணிந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெக.,விற்கு சென்று அதே தொகுதிகளில் இடைதேர்தலில் போட்டியிட சீட் கேட்டு பெற்று, மீண்டும் எம்எல்ஏ.,வாக வாய்ப்புள்ளது. அல்லது இபிஎஸ் அணிக்கு மீண்டும் சென்று அதிமுக எம்எல்ஏ.,வாக தொடரலாம். இந்த இரண்டு வாய்ப்புகள் மட்டும் தற்போது அந்த 17 எம்எல்ஏ.,க்கள் முன்னால் உள்ளது.