புதிய கட்சி துவங்குகிறாரா அண்ணாமலை?.. பாஜக தலைவரை சந்திக்க டெல்லி விரைந்தார்

Su.tha Arivalagan
Jun 01, 2026,11:18 AM IST

சென்னை: தமிழக அரசியலிலும், குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியிலும் (பாஜக) கடந்த சில நாட்களாக பல்வேறு பரபரப்பான விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், அதன் உச்சகட்டமாக ஒரு முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, தனிக்கட்சி தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.


இந்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.


சமீப காலமாகவே அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்துப் பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அவர் பெரிதாக எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில்தான் அவர் தனிக் கட்சி தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.




பாஜகவிலிருந்து விலகித் தனிக்கட்சி தொடங்கப் போவதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு குறித்த செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் உற்றுநோக்கலையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, தன்னுடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பது குறித்து அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில் பாஜகவைக் காலூன்றச் செய்யப் பல்வேறு தீவிர முயற்சிகளையும், பாதயாத்திரைகளையும் மேற்கொண்டவர் அண்ணாமலை. இந்தச் சூழ்நிலையில், தேசியத் தலைவர் நிதின் நபினுடனான இந்தச் சந்திப்பு வெறும் சாதாரண சந்திப்பாக இருக்காது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


இந்தச் சந்திப்பின் போது கட்சியின் உட்கட்சி விவகாரங்கள், தமிழக அரசியல் சூழல் மற்றும் அண்ணாமலையின் தனிப்பட்ட அரசியல் எதிர்காலம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார் என்ற தகவல் உண்மையானதா அல்லது வெறும் வதந்தியா என்பதற்கான தெளிவான விடை இந்தச் சந்திப்பிற்குப் பின் அவர் அளிக்கும் விளக்கத்தில் தெரியவரும். பாஜகவின் தேசியத் தலைமைக்கும், அண்ணாமலைக்கும் இடையே நடக்கவிருக்கும் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


சில நாட்களுக்கு முன்புதான் திமுக அதிமுக கூட்டணி அமைக்க முயன்றதாக செய்திகள் வெளியாகின. பிறகு திமுக - பாஜக கூட்டணி வரப் போவதாக புதிய செய்திகள் உலா வர ஆரம்பித்தன. இப்போது அண்ணாமலை தனிக் கட்சி என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. பாஜகவை மையமாக வைத்து இதுபோன்ற செய்திகள் வெளியாவதை மக்கள் கவனித்துக் கொண்டுள்ளனர். எந்தப் பூனைக் கூட்டி எப்போது வெளியே வருமோ.. பொறுத்திருந்து பார்ப்போம்.