என்ன சொல்றீங்க?...ஆப்பிள் ஜூஸ் குடித்தால் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா?

Su.tha Arivalagan
Mar 23, 2026,02:53 PM IST

"தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது" என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டிருப்போம். ஆனால், அதே ஆப்பிளை ஜூஸாக குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு அத்தனை நல்லது அல்ல என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். சமீபத்தில் வெளியான சுகாதார ஆய்வறிக்கைகள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையின்படி, ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் சில முக்கிய பாதிப்புகள் குறித்து இங்கே விரிவாகக் காண்போம்.


ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் :


1. நார்ச்சத்து குறைபாடு :

ஒரு முழு ஆப்பிளைச் சாப்பிடும் போது, அதன் தோலிலும் சதையிலும் உள்ள நார்ச்சத்து (Fiber) நமக்கு முழுமையாகக் கிடைக்கிறது. இது செரிமானத்தை மெதுவாக்கி, ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்கிறது. ஆனால் ஆப்பிளை ஜூஸாக மாற்றும் போது, அதிலுள்ள நார்ச்சத்து முற்றிலும் நீக்கப்பட்டு விடுகிறது. இதனால் அந்த ஜூஸ் வெறும் 'சர்க்கரைத் தண்ணீராக' மாறிவிடுகிறது.


2. ரத்த சர்க்கரை அதிகரிப்பு :




ஆப்பிள் ஜூஸில் இயற்கையாகவே பிரக்டோஸ் (Fructose) எனும் சர்க்கரை அதிகம் உள்ளது. நார்ச்சத்து இல்லாத நிலையில், இந்த சர்க்கரை ரத்தத்தில் மிக வேகமாகச் சேர்கிறது. இது இன்சுலின் சுரப்பியில் அழுத்தத்தை ஏற்படுத்தி, நீண்ட காலத்தில் நீரிழிவு நோய் (Diabetes) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.


3. உடல் எடை அதிகரிப்பு :

ஒரு முழு ஆப்பிளைச் சாப்பிடும் போது நமக்குக் கிடைக்கும் 'வயிறு நிறைந்த உணர்வு', ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் போது கிடைப்பதில்லை. இதனால் நாம் கூடுதல் கலோரிகளை உட்கொள்ள நேரிடுகிறது. குறிப்பாக கடைகளில் விற்கப்படும் பேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஜூஸ்களில் கூடுதல் சர்க்கரை மற்றும் பதப்படுத்திகள் சேர்க்கப்படுவதால், அது உடல் பருமனுக்கு முக்கிய காரணமாகிறது.


4. பல் சிதைவு :

ஆப்பிள் ஜூஸில் உள்ள அமிலத்தன்மை மற்றும் சர்க்கரை பற்களின் எனாமல் பகுதியைச் சிதைக்கக்கூடும். குறிப்பாகக் குழந்தைகளுக்கு அடிக்கடி ஆப்பிள் ஜூஸ் கொடுப்பது பற்களில் சொத்தை மற்றும் ஈறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


5. செரிமானக் கோளாறுகள்:

ஆப்பிளில் உள்ள 'சார்பிட்டால்' (Sorbitol) எனும் சர்க்கரை வகை சிலருக்குச் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக அதிகப்படியான ஆப்பிள் ஜூஸ் குடிப்பது வயிற்றுப்போக்கு, வாயுத்தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்ற கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.


நிபுணர்களின் ஆலோசனை:


ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், ஆப்பிளை ஜூஸாகக் குடிப்பதற்குப் பதில், அதன் தோலுடன் சேர்த்து முழுப் பழமாகச் சாப்பிடுவதே சிறந்தது. தாகத்திற்காக ஜூஸ் குடிக்க விரும்பினால், அதில் சர்க்கரை சேர்க்காமல் மிகக் குறைந்த அளவில் அவ்வப் போது எடுத்துக் கொள்ளலாம். ஆபிளை அப்படியே சாப்பிடுவதால் குடல் புற்றுநோய்கள் தடுக்கப்படுகிறது. கல்லீரல் பாதுகாக்கப்படுகிறது என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.