தவெக.வில் இணைகிறாரா கே.ஏ.செங்கோட்டையன்? .. திடீர் பரபரப்பு.. பின்னணியில் என்ன நடக்குது?
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாகவும், இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், செங்கோட்டையன் தரப்பு பதிலுக்காக தவெக காத்திருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
இது உண்மை தானா? உண்மையில் என்ன தான் நடக்கிறது என்ற பரபரப்பான உண்மைகள் பற்றி வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த வாரம் வரை காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியுடன் ஒன் டு ஒன் பேச்சுவார்த்தை நடத்த விஜய் தரப்பு முயற்சித்து வருவதாகவும், தவெக-காங்கிரஸ் கூட்டணி ஏறக்குறைய உறுதியாகி விட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரவி வந்தது. அதற்கு முன், விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரனே வெளிப்படையாக கூறி வந்தார்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூட தவெக உடன் இணைய உள்ளது போன்று பேசி வந்தார். இவை அனைத்துமே பீகார் தேர்தலுக்கு முன்பு வரை தான். பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நிலைமையே மாறி விட்டது.
ஜகா வாங்கிய காங்கிரஸ்
தவெக பக்கம் செல்ல உள்ளதாகவும், அவர்களுடன் பேசி வருவதாகவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி திமுக கூட்டணியில் தங்களின் பலத்தை காட்ட திட்டமிட்டது காங்கிரஸ். ஆனால் பீகார் தேர்தலுக்கு பிறகு அந்த முடிவை கைவிட்டு, கூட்டணியை பேசி இறுதி செய்ய ஐவர் குழு ஒன்றை அமைத்து விட்டது. இதனால் தவெக-காங்கிரஸ் கூட்டணி என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில்தான் இப்போது அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக.,விற்கு செல்வதாக சொல்லப்படுகிறது.
பொதுவாகவே அரசியலில், தங்களுக்கு அதனால் என்ன ஆதாயம் கிடைக்கும்? சாதகம் அதிகமா அல்லது பாதகம் அதிகமா என்பதை கணக்கிட்டு தான் எந்த ஒரு அரசியல் கட்சியும் அல்லது அரசியல் தலைவரும் எந்த ஒரு முடிவையும் எடுப்பார்கள். இந்த கோணத்தில் ஆராய்ந்து பார்த்தால் தவெக உடன் இணைவதால் மூத்த அரசியல் தலைவரான செங்கோட்டையனுக்கு என்ன பலன் கிடைக்கும்? நிச்சயம் செங்கோட்டையனுக்கு இது லாபமாகத்தான் இருக்கும்.
தன்னை தொடர்ந்து லைம்லைட்டில் வைத்துக் கொள்ள தவெக போன்ற கட்சியின் ஆதரவு அவருக்கு உதவவே செய்யும். அதில் சந்தேகம் கிடையாது. கண்டிப்பாக கோபி தொகுதியில் தவெக சார்பாக அவர் போட்டியிட்டால் நிச்சயம், திமுக, அதிமுகவுக்கு சவாலாகவே இருக்கும்.
தவெகவுக்கு என்ன லாபம்
சரி, செங்கோட்டையனின் வருகையால் தவெக.,விற்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று பார்த்தால், பெரிய அளவில் லாபம் இருக்காது என்றுதான் சொல்கிறார்கள். காரணம், செங்கோட்டையனின் ஆதரவு, பலம் என்பது இப்போதைக்கு கோபி தொகுதியைத் தாண்டி நிரூபிக்கப்படவில்லை. எனவே அவரது வருகையால் தவெகவுக்கு என்ன லாபம் என்ற கேள்வி எழுகிறது.
ஆனால் ஒரு லாபம் இருக்கிறது.. செங்கோட்டையன் மூத்த அரசியல் தலைவர், எம்ஜிஆர் காலத்திலிருந்தே அரசியலில் இருப்பவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தலைவராக ஒரு காலத்தில் வலம் வந்தவர். பல முக்கியத் துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர். ஒருங்கிணைப்புப் பணிகளை திறம்பட செய்யக் கூடியவர்.
தவெகவிடம் இப்போது எந்த ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரும் இல்லை. ஒரு வேளை செங்கோட்டையன் தவெகவுக்கு வந்தால் நிச்சயம் தவெகவுக்கு அது புதிய பலமாகவே அமையும்.. அதாவது எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தனது அனுபவத்திலிருந்து நிச்சயம் தவெகவுக்கு கற்றுக் கொடுப்பார் செங்கோட்டையன். தேமுதிகவை ஆரம்பித்தபோது இப்படித்தான் பண்ருட்டி ராமச்சந்திரனை பயன்படுத்தினார் விஜயகாந்த்.
விஜயகாந்த் ரூட்டில் விஜய்
அதேபோல செங்கோட்டையன் வசம் உத்திகள், பிற அரசியல் பணிகளை கொடுத்து விட்டால், விஜய் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்திப்பது மேலும் எளிதாகும் வாய்ப்புள்ளது. எனவே அந்த வகையில் பார்த்தால் செங்கோட்டையன் வருகை தவெகவுக்கு ஓரளவு பலன் தரவே செய்யும்.
இருப்பினும் இது எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை. செங்கோட்டையன் பாஜக தலைமையின் ஆதரவு பெற்றவராக பார்க்கப்படுகிறார். எனவே அவர் தவெக பக்கம் வந்தால் அதை வைத்தே திமுக விஜய்யை டார்கெட் செய்யலாம் என்பதையும் நாம் மறுக்க முடியாது.