பீகார் சட்டசபைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் மகள் மீண்டும் களத்தில் குதிக்கிறாரா?
பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் லாலு பிரசாத்தின் மகள் ரோகிணி ஆச்சார்யா, மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதாக ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது.
ஆனால் அந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார். தனக்கு ராஜ்ய சபா சீட், எம்எல்ஏ சீட் எதுவும் தேவையில்லை என்றும், யாரையும் ஆதரிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். குடும்பத்தில் யாருடனும் போட்டி இல்லை என்றும், எதிர்கால அரசில் எந்த பதவியும் வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"எனக்கு என் சுயமரியாதை, என் பெற்றோருக்கான அர்ப்பணிப்பு, என் குடும்பத்தின் கௌரவம் தான் முக்கியம். கட்சிக்குள் பதவிக்காக சிலர் தவறான செய்திகளை பரப்புகிறார்கள்" என்று ரோகிணி ஆச்சார்யா கூறியுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட சில கருத்துகளால் குடும்பத்தில் குழப்பம் இருப்பதாக செய்திகள் வந்தன.
குறிப்பாக, அவரது தம்பி தேஜஸ்வி யாதவின் செல்வாக்கு குறித்து கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது. மேலும், அவர் தனது அப்பா மற்றும் தேஜஸ்வியை சமூக வலைத்தளங்களில் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், அவர்கள் இருவரும் இன்னும் அவரை பின்தொடர்கிறார்கள். ரோகிணி ஆச்சார்யா கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அதன் பின்னர் அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
ரோகிணி ஆச்சார்யா ஒரு மருத்துவர். அவருக்கு 47 வயது. அவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். கடந்த வாரம், தான் ஒரு மகளாகவும், சகோதரியாகவும் தனது கடமைகளை தொடர்ந்து செய்வேன் என்றும், பதவிகளை துரத்த மாட்டேன் என்றும் அவர் கூறினார். தனது தந்தைக்காக சிறுநீரகம் தானம் செய்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். ஆபரேஷன் அறைக்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோவையும் அவர் பகிர்ந்தார். "தியாகம் செய்ய தயாராக இருப்பவர்களுக்கு, தைரியமும், சுயமரியாதையும் ரத்தத்தில் ஊறியிருக்கும்" என்றும் அவர் எழுதியிருந்தார்.
ரோகிணி ஆச்சார்யாவின் கருத்துக்கு அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். தேஜ் பிரதாப் யாதவ் அடிக்கடி கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. "ரோகிணி என்னை விட மூத்தவர். அவர் செய்த தியாகம் பெரும்பாலான மகள்கள், சகோதரிகள் அல்லது தாய்மார்கள் செய்ய முடியாதது. அவர் வெளிப்படுத்திய வலி நியாயமானது" என்று தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கட்சியை லாலு பிரசாத் யாதவின் வழிகாட்டலில் தேஜஸ்விதான் நடத்தி வருகிறார். அவரையே வருங்கால முதல்வராகவும் அவரது கட்சியினர் பார்க்கிறார்கள். பீகார் மாநில மக்கள் மத்தியிலும் கூட தேஜஸ்விக்கு செல்வாக்கு கூடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் ரோகிணி குறித்த பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.