TN Assembly elections 2026: அதிகமான கட்சிகள் கூட்டணிக்கு வருவது திமுக.,விற்கு சாதகமா, பாதகமா?

Su.tha Arivalagan
Aug 04, 2025,11:10 AM IST

சென்னை: கடந்த சில நாட்களாக தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சி தலைவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசி வருகிறார்கள். இதற்கு பல்வேறு வகையான கலர் கொடுக்கப்படுகிறது.


சீமான், ஒபிஎஸ், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போனில் பேசி உள்ளார். ஆனால் இவர்கள் அனைவருமே, மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திரும்பி இருக்கும் முதல்வரிடம் நலம் விசாரித்தோம் என ஒரே மாதிரி சொல்லி வருகிறார்கள். ஆனால் சீமான் தவிர மற்றவர்கள் கூட்டணி தொடர்பாக தான் திமுக தலைவரை சந்தித்தார்கள் என மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது. 


தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக பக்கம் செல்வது திமுக.,விற்கும், திமுக கூட்டணிக்கும் மிகப் பெரிய பலமாக இருப்பதாக தோன்றும். இப்போது தமிழக அரசியல் களத்தில் அதிமுக, பாஜக தனித்து விடப்பட்டது போலவும், இவர்கள் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தவிர ஒருவர் கூட இல்லை என்பது போலவும் தோன்றும். திமுக கூட்டணி மிக பலமாக மாறி வருவதால் இப்போதே திமுக.,வின் வெற்றி உறுதியாகி விட்டது. அதிமுக-பாஜக நிலை இப்படி ஆகி விட்டதே என்றெல்லாம் நினைக்க தோன்றும். ஆனால் இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இதை கண்டு கொள்ளாமல் அதிமுக.,வும் பாஜக.,வும் தொடர்ந்து அமைதி காத்து வருகின்றன. இதன் சூட்சமம் என்ன என்பதை நாம் சற்று அரசியல் கோணத்தில், கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.




திமுக கூட்டணிக்கு அனைத்து கட்சிகளும் சென்றால் அது நிச்சயம் திமுக.,வை ஒரு ஆபத்தான, நெருக்கடியான நிலையில் தான் கொண்டு போய் நிறுத்தும். காரணம், கூட்டணி சேர்ப்பது பெரிய விஷயம் அல்ல. கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் தேர்தலில் சீட் கொடுத்தாக வேண்டும். மீண்டும் வெற்றி பெற்று, திமுக தனிப் பெரும்பான்மையும் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 234 தொகுதிகளில் திமுக மட்டுமே 180 முதல் 190 வரையிலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும். மீதமுள்ள 44 தொகுதிகளை தான் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடியும். 2016 தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட சம்மதித்த மதிமுக, விசிக போன்ற கட்சிகள் 2024 லோக்சபா தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட மறுத்து விட்டன.


இதனால் விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இந்த முறையும் தங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள். இந்த 2 கட்சிகளுமே குறைந்த பட்சம் தலா 10 சீட்களாவது கேட்பார்கள். காங்கிரசிற்கு 10, மதிமுக மற்றும் விசிக.,விற்கு 5 என்று வைத்தால் கூட மீதமுள்ள 24 தொகுதிகளை தான் பாமக, தேமுதிக, ஓபிஎஸ் ஆகியோருக்கு கொடுக்க முடியும். அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை மறுத்தால் கூட்டணியில் சேர மாட்டார்கள் அல்லது தொகுதிகள் குறைக்கப்படும் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறும்.




அப்படி வெளியேறும் கட்சி அதிமுக அல்லது தவெக கூட்டணியில் போய் இணையும். அதே போல், தொகுதி பங்கீட்டில் சரியான உடன்படிக்கை ஏற்படவில்லை, மனக்கசப்பு, மற்ற கட்சிகளுடன் ஒத்து போகாத நிலை இருந்தாலும் கடைசி நிமிடத்தில் கூட திமுக கூட்டணியில் இருந்து கூட்டணி கட்சிகள் வெளியேறும் முடிவை எடுக்கலாம். இந்த இரண்டில் எது நடந்தாலும்  அது கண்டிப்பாக திமுக.,விற்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.


ஒருவேளை தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்தும் சுமூகமாக முடிந்து, தேர்தலில் போட்டியிட்டாலும் திமுக மட்டும் 150 இடங்களுக்கும் மேலான இடங்களில் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இது நடக்கா விட்டால், ஆட்சியை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் சொல்லும் எந்த ஒரு நிபந்தனைக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு திமுக தள்ளப்படும். இதில் எது நடந்தாலும் அது அதிமுக-பாஜக கூட்டணிக்கு சாதகமாகி விடும். வெற்றி வாய்ப்பையும், ஆட்சி அமைக்கும் வாய்ப்பையும் ஈஸியாக அதிமுக கூட்டணி தட்டி தூக்கி விட்டு போய் விடும்.