அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்?

Su.tha Arivalagan
Jun 11, 2026,11:46 AM IST

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியில் விரைவில் அதிரடி மாற்றம் வரவிருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 


தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்குப் பதிலாக, கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் எனத் பலத்த ஊகங்கள் எழுந்துள்ளன.


கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வரும் மல்லிகார்ஜுன கார்கே, பல்வேறு முக்கிய தேர்தல்களை எதிர்கொண்டு கட்சியைத் துடிப்புடன் வழிநடத்தினார். எனினும், தற்போதைய அரசியல் சூழல், கட்சியின் எதிர்கால உத்திகள் மற்றும் தலைவர்களின் பணிச்சுமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அவர் விரைவில் மாற்றப்படலாம் என்று தெரிகிறது.


காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற விவாதம் டெல்லி மேலிடத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த தலைவருக்கான பரிசீலனைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ப.சிதம்பரம் பெயர் முன்னணியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை மிகச் சிறப்பாக வகித்த நீண்ட நாடாளுமன்ற மற்றும் நிர்வாக அனுபவம் கொண்டவர்.




பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சட்ட நுணுக்கங்களில் வல்லவரான இவர், தேசிய அளவில் அனைத்து மாநிலத் தலைவர்களுடனும், எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிற தலைவர்களுடனும் சுமுகமான உறவைக் கொண்டிருப்பவர்.


மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்ந்து மீண்டும் ஒரு தென்னிந்தியத் தலைவருக்கு காங்கிரஸ் கட்சியின் உயரியப் பதவியை வழங்குவது, வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் கட்சிக்குப் பலம் சேர்க்கும் என மேலிடம் கருதுவதாகக் கூறப்படுகிறது.


காங்கிரஸ் தேசிய தலைவர், தமிழக தலைவர் ஆகிய பதவிகளில் மாற்றம் வர உள்ளதாக கூறப்படும் நிலையில் அவை உண்மை தானோ என நினைக்க வைக்கும் வகையில் நீண்ட இடைவேளைக்கு ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வர் விஜய்யை சந்தித்து பேசி விட்டு வந்தார். 


இன்று செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், தவெக அரசு 5 ஆண்டுகள் நிச்சயமாக நீடிக்கும் என தெரிவித்துள்ளார். 


மேலும் அவர் கூறுகையில், 4399 நாட்கள் நரேந்திர மோடி பாரதப் பிரதமராகத் தொடர்ந்து இருப்பது பாராட்ட வேண்டிய சாதனை. ஆனால் அது ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது பிழை. 1947 முதல் 1952 வரை நேரு பிரதமராக இருந்தார் என்பதை மறக்க முடியுமா? நீக்க முடியுமா? பிரதமர் மோடியின் 12-ஆண்டு சாதனையை பாராட்டுவோம். அதே நேரத்தில் பாரத ரத்னா நேருவின் 17-ஆண்டு சாதனையைப் போற்றுவோம்


1947 முதல் 1952 வரை பிஞ்சுக் குழந்தைப் பருவத்தில் இருந்த ஜனநாயகத்தைப் பாலூட்டி வளர்த்த பெருமை ஜவஹர்லால் நேருவை சார்ந்தது என்பதை நினைவு கொள்வோம் என தெரிவித்துள்ளார்.