பாகிஸ்தான் பந்து வீச்சை வச்சு செய்த இஷான் கிஷன் அவுட்.. ஆனாலும் இந்தியா ஸ்டிராங்!
கொழும்பு: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் மோதலில், தொடக்க வீரர் இஷான் கிஷன் தனது அதிரடி அரைசதத்தை பூர்த்தி செய்த கையோடு ஆட்டமிழந்தார். ஆனால் அவர் சேர்த்துக் கொடுத்த ரன்கள், இந்தியாவுக்கு வலுவான தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.
ஆர். பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த கிஷன், இந்திய அணிக்கு ஒரு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். சரமாரியான பவுண்டரிகளை விளாசி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த இஷான் கிஷன், தனக்குக் கிடைத்த சரியான வாய்ப்புகளையெல்லாம் ரன்களாக மாற்றி வெளுத்தெடுத்து விட்டார்.
40 பந்துகளைச் சந்தித்த இஷான் கிஷன், 77 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு மிகப் பெரிய அடித்தளத்தைப் போட்டுக் கொடுத்தார். முதல் விக்கெட்டாக அபிஷேக் சர்மாவை இந்தியா இழந்தபோதிலும், அவருக்கும் சேர்த்து செமத்தியான ரன் விருந்தைக் கொடுத்தார் இஷான் கிஷன்.
கிஷனின் அதிரடியால் இந்திய அணியின் ரன் விகிதம் தற்போது ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேலாக உள்ளது. தொடக்கத்திலேயே ஒரு பெரிய ஸ்கோரை எட்டும் நோக்கில் இந்தியா ஆக்ரோஷமாக விளையாடி வருகிறது. விக்கெட் விழுந்தாலும், களத்தில் உள்ள மற்ற வீரர்கள் இந்த வேகத்தைத் தொடர்வார்களா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இந்தியா நிச்சயம் மிகப் பெரிய ஸ்கோரை எடுக்கும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது.