அரை சதம் போட்ட கையோடு அவுட்டானார் இஷான் கிஷன்.. இந்தியாவுக்கு 300 ரன்கள் வருமா?

Su.tha Arivalagan
Mar 08, 2026,08:16 PM IST

அகமதாபாத்: அதிரடியாக ஆடி வந்த இஷான் கிஷன் அரை சதம் போட்ட நிலையில் தற்போது அவுட்டாகி வெளியேறியுள்ளார்.


நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகின்றனர். குறிப்பாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக ஆடினர். இஷான் கிஷன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் போட்டு அசத்தினார்.


அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய இஷான் கிஷன், சஞ்சு சாம்சனுடன் இணைந்து அதிரடியாக ஆடி வந்தார். சஞ்சு போன பிறகும் இஷானின் வேகம் குறையவில்லை. தொடர்ந்து அதிரடி காட்டி வந்த அவர் அரைசதம் போட்டு அசத்தினார். இருப்பினும் 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்து விட்டார்.




முன்னதாக, சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் இணை 25 பந்துகளில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சாதனை படைத்தது.


இந்தத் தொடர் முழுவதும் இஷான் கிஷன் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். இதற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பையில் ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.


தொடரின் தொடக்கத்தில் நமீபியாவுக்கு எதிராக வெறும் 20 பந்துகளில் அரைசதம் விளாசி, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அரைசதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார்.