EOS-09 செயற்கைக் கோளை செலுத்தும் முயற்சி தோல்வி.. இஸ்ரோவின் 101வது ராக்கெட் ஏவுதலில் பின்னடைவு

Su.tha Arivalagan
May 18, 2025,10:24 AM IST

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் 101வது பெரிய ராக்கெட் ஏவும் முயற்சி இன்று தோல்வியில் முடிந்தது. ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டாலும் கூட அதில் இணைக்கப்பட்டிருந்த செயற்கைக் கோள் EOS-09ஐ பிரிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.


இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி61 ராக்கெட் ஏவப்பட்டது. இது இஸ்ரோவின் 101வது பெரிய ராக்கெட் ஏவுதல் என்பதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்த ராக்கெட் மூலம் EOS-09 செயற்கைக் கோளை புவி வட்டப் பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இஓஎஸ்-09 திட்டத்தை செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.


பிஎஸ்எல்வி ராக்கெட்டின் நான்கு நிலைகளைக் கொண்ட ராக்கெட்டின் செயல்பாடு இரண்டாவது நிலை வரை சீராக இருந்தது. அதன் பிறகு அதில் கோளாறு ஏற்படவே செயற்கைக் கோளை செலுத்த முடியாமல் போனது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், ஆய்வுக்குப் பிறகு என்ன பிரச்சினை என்பது தெரிய வரும் என்றார்.




பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளைப் பொறுத்தவரை இது 63வது பயணம். அதேசமயம், பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் வகை ராக்கெட்டுகளில் இது27வது பயணம் ஆகும். மே 18க்கு முன்பு வரை மொத்தம் 100 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது இஸ்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.


இஓஎஸ்-09 அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இது சி-பேண்ட் செயற்கை துளை ரேடார் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வானிலை நிலைகளிலும், பகல் மற்றும் இரவு நேரங்களிலும் பூமியின் மேற்பரப்பின் உயர் தெளிவுத்திறன் படங்களை எடுக்க முடியும். இந்த திறன் இந்தியாவின் பல்வேறு துறைகளின் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.