PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO), 2026-ஆம் ஆண்டின் தனது முதல் விண்வெளிப் பயணத்தை வரும் ஜனவரி 12-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து, காலை 10:17 மணிக்கு பி.எஸ்.எல்.வி - சி62 (PSLV-C62) ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் EOS-N1 (Anvesha) என்ற அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை நிலைநிறுத்துவதாகும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) உருவாக்கப்பட்ட இது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கண்காணிப்பு பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மேலும் 14 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதில் ஸ்பெயின் நாட்டின் 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' (KID) எனும் மறுபிரவேச தொழில்நுட்ப சோதனை கருவியும் அடங்கும்.
இஸ்ரோவின் வணிகப் பிரிவான 'நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்' (NSIL) மேற்கொள்ளும் 9-வது பிரத்யேக வணிகப் பணி இதுவாகும். மேலும், இது பி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையின் 64-வது பயணமாகும். EOS-N1 செயற்கைக்கோள் உயர் ரக இமேஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்டது. இது எல்லைப் பாதுகாப்பு, நகர்ப்புற திட்டமிடல், கனிம வளங்களைக் கண்டறிதல் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற பணிகளுக்குப் பெரிதும் உதவும்.
ராக்கெட் ஏவப்பட்ட சுமார் 17 நிமிடங்களில் முதன்மை செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். முழுப் பயணமும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளப் பார்வையாளர் மாடத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதைப் பார்க்க விரும்புவோர், இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த ஏவுதலுக்கான 25 மணி நேர கவுண்டவுன் ஜனவரி 11-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டை ஒரு மாபெரும் வெற்றியுடன் தொடங்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். இந்த செயற்கைகோள் ஏவும் பணிகள் வெற்றிகரமாக அமைவதற்காக வழக்கம் போல் இஸ்ரோ அதிகாரிகள் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சென்று வழிபாடு நடத்தி விட்டு வந்துள்ளனர்.