மலை போல வந்ததா? மழை போல வந்ததா? .. ஒரு மொழித் தேடல்!

Su.tha Arivalagan
Jan 09, 2026,02:02 PM IST

- ஆ.வ. உமாதேவி


தமிழில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் பழமொழிகளில் ஒன்று: "மலை போல வந்தது, பனி போல விலகியது!" தாங்க முடியாத ஒரு துன்பம் நம்மைச் சூழ்ந்து, பின் அது சுவடு தெரியாமல் மறைந்து போகும் போது இந்த வாசகத்தை நாம் ஆறுதலாகச் சொல்வோம். ஆனால், இந்தப் பழமொழியில் பொதிந்துள்ள தர்க்க ரீதியான உண்மையை நாம் கவனித்ததுண்டா?


ஒரு பெரிய துன்பத்தை 'மலை' என்று உருவகப்படுத்துவது இயல்புதான். ஆனால், அந்த மலை போன்ற துன்பம் விலகிச் செல்வதை 'பனி'யோடு ஒப்பிடுவது சற்றே சிந்திக்க வைக்கிறது.




மலை என்பது ஒரு திடமான, அசையாத பொருள். பனி என்பது மென்மையான, காற்றில் கரையும் தன்மை கொண்டது.


ஒரு மலை எப்படிப் பனியாக மாற முடியும்? அல்லது மலை போன்ற துயரம் பனியைப் போல எப்படி எளிதாக மறைய முடியும்? இந்த இடத்தில்தான் நம் முன்னோர் கையாண்ட மிகச்சரியான சொல் சிதைந்து போனதை நாம் உணர வேண்டும்.


உண்மையான பழமொழி என்ன தெரியுமா.. அது..  "மழை போல வந்தது; பனி போல விலகியது!"


இப்பழமொழியின் ஆதி வடிவம் "மழை" என்பதே ஆகும். பெய்யும் மழையையும், படரும் பனியையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே அறிவியல்பூர்வமானது.


மழை போல வந்தது - ஒரு கனமழை பெய்யத் தொடங்கும் போது அது ஆரவாரத்துடனும், வேகத்துடனும், பெரும் தேக்கத்துடனும் வரும். அதுபோலவே நம் வாழ்வின் துயரங்களும் திடீரென ஒரு பெரும் பெருவெள்ளம் போல நம்மை நிலைகுலையச் செய்யும்.


பனி போல விலகியது - மழையின் வேகம் அடங்கிய பிறகு, எஞ்சியிருக்கும் ஈரப்பதம் மெல்லிய பனியாக மாறி மெல்ல மெல்லக் காற்றில் கரைந்து போவதைப் போல, அந்தப் பெரும் துயரமும் காலப்போக்கில் சிறு சுவடு கூட இல்லாமல் மறைந்து போகும்.


ஏன் இந்த மாற்றம்?


"மழை" என்ற சொல் உச்சரிப்புப் பிழையாலும், காலப்போக்கில் ஏற்பட்ட பேச்சுவழக்கு மாற்றத்தாலும் "மலை" என மருவிவிட்டது. மலை என்பது பிரம்மாண்டத்தைக் குறிப்பதால், துன்பத்தின் அளவைக் காட்ட மக்கள் 'மலை' என்ற சொல்லையே அப்படியே நிலைக்கச் செய்துவிட்டனர்.


இயற்கையின் மாற்றங்களை மனித வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தமிழர்களின் மரபு. அடர்த்தியான மழை பொழிந்து ஓய்ந்தபின், அமைதியான பனிப்படலம் தோன்றி மறைவதைப் போன்றதே மனித வாழ்வின் இன்னல்களும் என்பதை உணர்ந்து இனி இப் பழமொழியைச் சரியான பொருளில் பயன்படுத்துவோம்!


(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)