எல்லாமே சக்தி (It's All About Energy)
- மைத்ரேயி நிரஞ்சனா
நம்முடைய எல்லா உணர்வுகளும் உணர்ச்சிகளும் ஒருவகை சக்தியே..
காதல் அன்பு கருணை கோபம் எரிச்சல் பேராசை பொறாமை இவை எல்லாமே ஒரு வகையான ஆக்கபூர்வமான அல்லது எதிர்மறை ஆற்றல் உள்ள சக்திகள்..
சக்தியை அழிக்க முடியாது.. (Energy cannot be destroyed) நம் நாம் இயற்பியலில் படித்த விதி தான்.. சக்தியை மாற்ற முடியுமே அன்றி அழிக்க முடியாது..
உதாரணத்திற்கு நமக்கு கோபம் வருகிறது என்று கொள்வோம்.. இதை இரு வழிகளில் நாம் எதிர்கொள்கிறோம்.. ஒன்று அதை வெளிப்படுத்துவது.. இன்னொன்று அதை அடக்கிக் கொள்வது.. அந்த சக்தியை நாம் வெளிப்படுத்தும் போது அது ஒரு சங்கிலித் தொடராக சென்று கொண்டிருக்கும்..(Chain Reaction).. பல பிறவிகளைக் கடந்தும் இது தொடரும் என்று சொல்லப்படுகிறது.. காரணமே இல்லாமல் சிலரை பார்த்தவுடன் கோபம் வருவது இதனால் தான்..
இன்னொரு வழி அதை அடக்கிக் கொள்வது.. இது நம்மை மிகவும் பாதிக்கும் விஷயமாக இருக்கிறது.. அந்தக் கோபம் நமக்குள் இருப்பதினால்.. நம்முடைய ஒவ்வொரு செயலிலும் வார்த்தையிலும் அது வெளிப்படுகிறது.. அடக்கி வைக்கப்பட்ட சக்தி உடலில் கேன்சர் ஆக மாறக்கூடும்..
ஒரு சிறிய கதையை பார்ப்போமா
காஷ்முஷ் காலையில் எழுந்து ஆபீஸ்க்கு கிளம்பி கொண்டிருந்தார்.. வரிசையாக மீட்டிங் உள்ளது என்று அதையே சிந்தித்துக் கொண்டிருந்தார்.. அப்போது அவரது மனைவி இதை வாங்கி வர வேண்டும் என்று வரிசையாக சொல்ல ஆரம்பிக்க அவருக்கு கோபம் வந்துவிட்டது.. அவர் மனைவியின் மீது எறிந்து விழுந்தார்..
அவரது மனைவி அந்த கோபத்தினால் தாக்கப்பட்டு தனது மகன் தனக்கு பொம்மை வேண்டும் என்று அவரிடம் கேட்க பையனுக்கு முதுகில் இரண்டு அடி வைத்தார்..
அந்த சிறுவன் அழுது கொண்டே வாசலுக்கு சென்று அங்கே போய்க் கொண்டிருந்த நாயின் மீது கல் விட்டெரிந்தான்..
அந்த நாய் கத்திக்கொண்டே அடுத்த தெருவிற்கு சென்று.. டாக்ஸி பிடிக்க சென்று கொண்டிருந்த ஒரு மனிதரை கடித்து விட்டது.. அவர் வலியில் துடித்து பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக்கொண்டு ஆபீஸ் சென்றார்..
அந்த மனிதர் வேறு யாருமில்ல.. காஷ்முஷின் மேல் அதிகாரி.. காஷ்முஷ் மீட்டிங் இல் ஏதோ சிறிய தவறு செய்து விட.... மேலதிகாரி தன்னை நாய் கடித்த எரிச்சலில்.. அவரைத் திட்டி ஒரு இன்கிரிமென்டை குறைத்துவிட்டார்..
காஷ்முஷ் ‘நான் என்ன பெரியதாக செய்துவிட்டேன்.. இவர் இவ்வளவு கடுமையாக நடந்து கொண்டார்’ என்று புலம்பினார்..
காலையில் தான் ஆரம்பித்தது தான் இப்போது தனக்கு நேர்ந்தது என்பதை காஷ்முஷ் உணரவில்லை..
இந்த முழு கதையை பார்த்த நமக்கு காஷ்முஷ்க்கு ஏன் இப்படி நடந்தது என்று தெரிகிறது.. இதற்கு நாம் பார்வையாளனாக.. சாட்சியாக இருக்கிறோம்..
இந்த இரு வழிகளில் தான் பொதுவாக மனிதர்கள் சக்தியை நிர்வகிக்கிறார்கள்..
மூன்றாவதாக ஒரு வழி உண்டு.. அது அந்த உணர்வு ஏற்படும் போது அதற்கு சாட்சியாக இருப்பது..(Becoming aware of that feeling / Energy).. விழிப்பாக அந்த உணர்வை /சக்தியை கவனித்தோமானால் அது உருமாறுகிறது.. (Energy transforms its quality) கோபம் என்ற ஆற்றல் கருணையாக உருமாறுகிறது.. தியானம் என்பது இந்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் விஷயமாக இருக்கிறது..
விழிப்புணர்வு (Awareness) என்பது முதலில் சிறு முயற்சியால் ஆரம்பித்தாலும் கடைசியில் முயற்சி இல்லாமல் எப்போதும் நிலையாக இருக்கக்கூடிய விஷயமாக மாறிவிடும்.. எல்லா செயல்களும் எல்லா உணர்வுகளும் விழிப்புணர்வில் நடக்க ஆரம்பிக்கும்.. ( Passive Awareness ) என்பது அளப்பரிய ஆற்றல் உடையது..
நமக்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் நாம் மட்டுமே காரணம்.. நாம் நம்மை சாட்சியாக இருந்து பார்க்கும்போது..(அதுவே உள்நோக்கி திரும்புதல்/ தியானம்) நமது செயல்களும் உணர்வுகளும் பெரிய மாற்றம் அடைகிறது..
ஆன்மீகம் என்பது நம்மை அறிவது..!
நாம் தொடர்வோம்..
மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர். ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.