RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

Su.tha Arivalagan
Jun 10, 2026,08:23 AM IST

சென்னை: இயக்குநர் இமயம் என அன்போடு அழைக்கப்பட்டவரும், தமிழ்நாட்டுக் கிராமங்களை மக்களிடம் அப்படியே காட்டி புதுமை படைத்தவருமான பாரதிராஜா இன்று காலமானார். தனது மகனின் மறைவுக்குப் பிறகு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாரதிராஜா இன்று  விடை பெற்றார்.


2025ம் ஆண்டு மார்ச் மாதம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணமடைந்தார். அவரது மரணம் பாரதிராஜாவை உலுக்கி விட்டது. அது முதலே அவர் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இன்று அவர் காலமானார்.


தமிழ் திரைப்பட உலகம் ஸ்டூடியோக்களுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த காலத்தில், கேமராவைத் தூக்கிக்கொண்டு கிராமத்துத் தெருக்களுக்கும், வயல்வெளிகளுக்கும் ஓடியவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவை 'ஸ்டூடியோ' என்ற நான்கு சுவர்களுக்குள்ளிருந்து மக்கள் வாழும் 'மண்ணிற்கு' அழைத்து வந்த பெருமை இவரையே சாரும். இவரது எதார்த்தமான கதைகளும், புதுமையான இயக்கமும் இவருக்கு இயக்குநர் இமயம் என்ற அழியாப் புகழைப் பெற்றுத் தந்தன.


தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் என்ற கிராமத்தில் 1941-ஆம் ஆண்டு பிறந்தார் பாரதிராஜா. இவரது இயற்பெயர் சின்னச்சாமி. சிறு வயது முதலே கலைகளின் மீது ஆர்வம் கொண்ட இவர், ஹெல்த் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நிலையில், சினிமா மீது கொண்ட காதலால், சென்னைக்கு வந்து நாடகங்களிலும், பின்னர் திரைப்படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.




1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படம் தான் இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படம். அதுவரை தமிழ் சினிமா பார்த்திராத மயிலு, சப்பாணி, பரட்டை போன்ற கதாபாத்திரங்களின் வழியே, ஒரு கிராமத்து வாழ்க்கையை அப்படியே திரையில் காட்டி, ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் பக்கம் திருப்பினார். மொத்த சினிமாவையும் இயல்புக்கு மாற்றிய பெருமை இவருக்கே உண்டு.


பாரதிராஜாவின் படங்கள் தமிழ் சினிமாவில் பல புதிய மாற்றங்களை உருவாக்கின.


பாரதிராஜாவின் படங்களில் கிராமத்து மனிதர்களின் பேச்சு வழக்கு, கலாச்சாரம், திருவிழாக்கள் மற்றும் வாழ்வியல் முறைகள் மிக துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டன.


தமிழ் சினிமாவிற்குப் பல தூண்களைக் கொடுத்தவர் பாரதிராஜா. ராதிகா, ராதா, ரேவதி, விஜயசாந்தி, நெப்போலியன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. பாக்யராஜ் என்ற மாபெரும் இயக்குநரையும் பட்டை தீட்டியவர் பாரதிராஜா. வைரமுத்துவை அறிமுகப்படுத்தியவர்.


இசைஞானி இளையாராஜவின் நெருங்கிய நண்பரான பாரதிராஜாவும், அவரும் இணைந்திருந்த காலங்கள் தமிழ்த் திரையுலகின் மாபெரும் பொக்கிஷங்கள்.  இளையராஜா - பாரதிராஜா கூட்டணி தமிழ் சினிமாவின் பொற்காலம். பாரதிராஜாவின் காட்சிகளுக்கு இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் உயிரூட்டின. 


16 வயதினிலே தொடங்கி இருவரும் இணைந்து கை கோர்த்துச் சென்ற காலங்களில் திரை ரசிகர்களுக்கு ஒவ்வொரு படத்திலும் விருந்து படைக்க இருவரும் தவறியதில்லை. முதல் மரியாதை இன்றளவும் வியக்க வைக்கும் மாபெரும் படைப்பு. 


வெறும் பொழுதுபோக்கு படங்களாக மட்டுமில்லாமல், பெண் சிசுக்கொலைக்கு எதிரான 'கருத்தம்மா', கிராமத்து சாதியக் கொடுமைகளுக்கு எதிரான 'வேதம் புதிது' போன்ற சமூக விழிப்புணர்வு படங்களையும் தைரியமாக எடுத்தார்.


பாரதிராஜா ஒரு இயக்குநர் மட்டுமல்ல,  மாபெரும்  திரை சரித்திரம். அவரது இடம் இன்றளவும் நிரப்பப்படாமலேயே உள்ளது. இனியும் அதை இட்டு நிரப்புவது மிக மிக கடினம்.


நம் பாசத்துக்குரிய இயக்குநர் இமயத்திற்கு பிரியா விடை கொடுப்போம்.. போய் வாருங்கள் பாரதிராஜா.