ரூ. 93,000க்கு வாங்கிய காரின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

Su.tha Arivalagan
Dec 03, 2025,03:29 PM IST

- க.சுமதி


டெல்லி:  ரூ. 93,000க்கு வாங்கிய காரின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?  தெரிஞ்சா ஆச்சரியமடைவீங்க மக்களே.


ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு ரசிகர்களாக இருக்காதவர்களே கிடையாது. 6 முதல் 60 வயது வரை அவரது படங்களுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உலகம் முழுவதும் உள்ளது. அப்படிப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் படங்களில் எல்லாமே விசேஷமாகத்தான் இருக்கும். அந்தப் படங்களைப் பார்த்துதான் நம்ம நாட்டுப் படங்கள் பாதிக்கு சீனே வைப்பார்கள்.


வித்தியாசமான துப்பாக்கி, வித்தியாசமான கார் என விதம் விதமாக கற்பனை செய்து ஜேம்ஸ் பாண்ட் படங்களை அலங்கரிப்பது வழக்கம். அந்த வகையில் பாண்ட் படங்களில் கார்களுக்கு தனி ஸ்டைல் இருக்கும். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கார்களைப் பார்க்க முடியும். அந்த வகையில் வந்த ஒரு காருக்கு இப்போது செம கிராக்கி ஏற்பட்டுள்ளது.




ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் வரும் ஆஸ்டன் மார்ட்டின் DB5 கார் தான் அது ... தனது 19 வயதில் பிரிட்டனை சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் இந்த வகை கார் மீது மோகம் கொண்டு ஒரு காரை வாங்கிப் பாதுகாப்பாக பராமரித்து வருகிறார். அவருக்கு இப்போது 71 வயது ஆகிறது. 1960 ஆண்டு காலகட்டத்தில் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட இந்த வகை கார்கள் புகழின் உச்சிக்கே சென்றன.


அப்போது சிறுவனாக இருந்த பிரிட்டனைச் சேர்ந்த வில்லியம்ஸ்க்கு அந்த மாடல் காரின் பொம்மை பரிசாக கிடைத்தது. அன்று முதல்  இந்த வகை காரின் மீது அளவில்லாத பிரியம் வைத்திருந்தார் வில்லியம்ஸ். 1973 இல் ஆஸ்டன் மார்ட்டின் DB5 வின் விலை வெகுவாக சரிந்தது. அப்போது 19 வயது இளைஞராக இருந்த வில்லியம் இந்த காரை நம்ம ஊர் மதிப்பில் ரூ. 93,000க்கு அதை வாங்கினார். வாங்கி தனது சிறுவயது கனவை நனவாக்கிக் கொண்டார்.


விலை சரிவிலேயே இருந்த இந்த காரின் விலையானது மீண்டும் உயரத் தொடங்கியது. அப்போது அவரது நண்பர்கள் பலரும் இந்த காரை விற்று விடும்படி வில்லியமிடம்  கூறியுள்ளனர். ஆனால் வில்லியம் இந்த காரின் மீது இருந்த தீராத காதலால் அதை விற்க மறுத்து விட்டார். கால ஓட்டத்தில்  காரை முறையாக பராமரிக்காததால் பழுதடைந்து தனது பொலிவையும் இழந்ததது ஆஸ்டன் மார்ட்டின் DB5.


கோவிட் காலத்தில் ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்திடம் காரை புதுப்பிக்க அனுப்பிய போது அந்த நிறுவனமானது 5.20 கோடிக்கு வாங்கிக் கொள்ள முன்வந்த போதும் காரை விற்காமல் அதை புதுப்பித்து தரும்படி கூறியுள்ளார் வில்லியம்ஸ். நான்காண்டு புதுப்பிப்பு பணிக்கு பின்னர்  மீண்டும்  அன்றலர்ந்த மலராக  புதுப்பொலிவுடன் உலாவருகிறது வில்லியமின் ஆஸ்டன் மார்ட்டின் DB5.


அன்று 93,000 வாங்கிய ஆஸ்டன் மார்டின்DB5 இன்று 10 கோடிக்கு மேல் விலைபேசப்பட்டாலும் விற்காமல் ஒய்யாரமாக உலா வருகிறார் வில்லியம்ஸ். இப்போது இந்தக் காரின் மதிப்பு ரூ. 10.41 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


(க.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)