ஜம்மு காஷ்மீரை உலுக்கி எடுத்த கன மழை.. வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற 5 பக்தர்கள் பலி
Aug 26, 2025,06:12 PM IST
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் கனமழை காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் வைஷ்ணோ தேவி கோயில் பாதையில் பயணித்த ஐந்து பக்தர்களும் அடங்குவர். பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
வைஷ்ணோ தேவி கோயில் பாதைக்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்காவாரி அருகே இந்திரபிரஸ்தா போஜ்னாலயா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிலச்சரிவு காரணமாக பல சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேர் வீடு இடிந்ததில் உயிரிழந்தனர். இரண்டு பேர் திடீர் வெள்ளத்தில் சிக்கி இறந்தனர். அப்பகுதியில் மேக வெடிப்பும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றுப் பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தோடா மற்றும் கிஸ்த்வார் ஆகிய பகுதிகளை இணைக்கும் NH-244 தேசிய நெடுஞ்சாலையில் கடும் மழை, நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவின் பல பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். நிலைமையை நேரில் பார்வையிட ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவிற்கு அடுத்த விமானத்தில் செல்கிறேன். அவசரகால மீட்புப் பணி மற்றும் பிற தேவைகளுக்காக கூடுதல் நிதி மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மட்டுமல்லாமல் இமாச்சல் பிரதேசத்திலும் கன மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.