Jananayagan release update விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்...போஸ்டருடன் வந்த புதிய அப்டேட்
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி உள்ள தங்களின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு குறித்த முக்கிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் குறித்த மிக முக்கியமான அப்டேட்டை புதிய போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்ற அறிவிப்புடன், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஜனநாயகன். டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில், விஜய்யின் அரசியல் அதிரடி வசனங்கள் நிறைந்த இந்த படம் ஜனவரி 09ம் தேதி பொங்கல் வெளியீடாக இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்று கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படம் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ப்படவில்லை. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இரண்டு நாட்களுக்கு முன்பு, 12 கட் கொடுத்து, ஜனநாயகன் படத்திற்கு "ஏ" சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியது. இதனால் ஜனநாயகன் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டு, ரிலீஸ் தேதி அறிவிப்பிற்காக அனைவரும் காத்திருக்க துவங்கினர்.
தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி பதிவு :
இந்நிலையில் இன்று படத்தின் புதிய போஸ்டர் மற்றும் முக்கியமான அப்டேட் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில், "See you soon in theatres nanba & nanbis" (திரையரங்குகளில் விரைவில் சந்திப்போம் நண்பா மற்றும் நண்பிகளே) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
மேலும், இப்படத்திற்கு தணிக்கைக் குழுவின் 'A' சான்றிதழ் (Certified A) வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் போஸ்டரில் பிரம்மாண்டமான 'A' குறியீடு சிவப்பில் குறிக்கப்பட்டுள்ளது. 'Coming Soon' என்ற வாசகத்துடன், படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்பதை தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
ரசிகர்களைக் கவர்ந்த போஸ்டர் லுக்
வெளியாகியுள்ள இந்த போஸ்டரில், நடிகர் விஜய் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் மாஸான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். கையில் ஒரு சாட்டையுடன், அதிரடி சண்டைக்காட்சிக்கான பின்னணியில் அவர் நிற்பது போன்ற இந்த போஸ்டர், படம் ஒரு பக்கா ஆக்ஷன் எண்டர்டெய்னராக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. அவருக்குப் பின்னால் மக்கள் கூட்டமாக அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 'ஜனநாயகன்' என்ற படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு, அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்களைப் பேசும் ஒரு வலுவான கதைக் களமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையத்தைக் கலக்கும் 'ஜனநாயகன்' அப்டேட்
விஜய்யின் அரசியல் வருகைக்கு இடையே வெளியாகும் படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் உச்சத்தில் உள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த தணிக்கைச் சான்றிதழ் மற்றும் ரிலீஸ் அப்டேட் குறித்த தகவல், படம் திரைக்கு வரத் தயாராகிவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. "விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்" என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இந்த பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.