விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு மிக முக்கியமான தீர்ப்பினை வழங்க உள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படும் 'ஜனநாயகன்' படம் ஜனவரி 09ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஆன்லைன் டிக்கெட்களும் புக்கிங் ஓபனான சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சில சிக்கல்கள் நீடித்து வந்தன. தணிக்கை வாரியம் (Censor Board) சில காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து, படக்குழுவினர் தணிக்கை சான்றிதழ் கோரி நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தணிக்கை வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முக்கிய விளக்கத்தை அளித்தார். அதில், "ஜனநாயகன் திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்யப் புதிய குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழு படத்தை முழுமையாகப் பார்த்த பிறகு, தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்" என வாதிடப்பட்டது. ஆனால் தணிக்கை குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்த பிறகு ஒருவருக்காக படத்தை மறு ஆய்வு செய்ய முடியாது என தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை நாளை (ஜனவரி 9, 2026) வழங்குவதாக அறிவித்திருந்தனர். படத்தின் ஃபர்ஸ் டே ஃபர்ஸ்ட் ஷோ நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என சொல்லப்பட்டிருந்த நிலையில், அந்த காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ரசிகர்களுக்கு பணம் வாபஸ் தரப்பட்டுள்ளது. ஜனநாயகன் வழக்கு எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும், எப்போது படம் ரிலீஸ் செய்யப்படும் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வந்த நிலையில், நாளை காலை 10:30 மணிக்கு ஜனநாயகன் பட வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
புதிய குழுவின் ஆய்வு மற்றும் தணிக்கை சான்றிதழ் குறித்த நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே படத்தின் வெளியீட்டுத் தேதி இறுதி செய்யப்படும். ஒருவேளை சாதகமான தீர்ப்பு வரும் பட்சத்தில், படம் திட்டமிட்டபடி நாளையே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் களத்தில் கால் பதித்துள்ள விஜய்யின் திரைப்படம் என்பதால், அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் அல்லது காட்சிகள் ஏதேனும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே தணிக்கையில் தாமதம் ஏற்படுவதாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. நாளை காலை 10:30 மணிக்குத் தெரியவரும் நீதிமன்றத் தீர்ப்பு, இந்தப் படத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.