ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு
சென்னை : விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு தவை விதித்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி வழங்கு மறுத்து, படத்தை மறு ஆய்விற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் யு/ஏ சான்றிதழ் தர ஒப்புதல் அளித்து விட்ட நிலையில், ஒருவரின் புகாருக்காக மறு ஆய்வு செய்ய முடியாது என படக்குழு மறுத்து விட்டது. இதனால் படத்திற்கு சென்சார் சான்று கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதனால் இது தொடர்பான படக்குழு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, படத்திற்கு யு/ஏ சான்று வழங்க வேண்டும் என சென்சார் போர்ட்டிற்கு உத்தரவிட்டார். ஆனால் தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்சார் போர்டு சார்பில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி பெஞ்ச், சென்சார் போர்டிடம் சரமாரியாக பல கேள்விகளை முன் வைத்தது. தொடர்ந்து தனி நீதிபதி அளித்த தீர்த்தை ரத்து செய்ததுடன், வழக்கின் விசாரணை பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஜனவரி 21ம் தேதி நடக்கும் என வழக்கை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி அளித்த உத்தரவிற்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பெஞ்சின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடெக்ஷன்ஸ் முடிவு செய்துள்ளது. அதோடு இந்த மேல்முறையீட்டு மனுவை வரும் திங்கட்கிழமை (ஜனவரி 12) அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவும் சுப்ரீம் கோர்ட்டிடம் கோரிக்கை வைக்கவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஜனநாயகன் படம் ரிலீசாவதற்கு சிக்கல் எழுந்துள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதோடு கரூர் சம்பவ வழக்கில் சிபிஐ அனுப்பி உள்ள சம்மனுக்கு ஜனவரி 12ம் தேதியன்று டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக உள்ள நிலையில், அதே நாளில் சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயகன் மேல்முறையீட்டு வழக்கும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதும் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.