ஜனநாயகன் பட தீர்ப்பை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு
சென்னை : விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்று வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளதால், படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற கேள்வி தற்போது எழுந்தது. ஆனால் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது.
கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படும் 'ஜனநாயகன்' படம் ஜனவரி 09ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஆன்லைன் டிக்கெட்களும் புக்கிங் ஓபனான சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சில சிக்கல்கள் நீடித்து வந்தன. தணிக்கை வாரியம் (Censor Board) சில காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து, படக்குழுவினர் தணிக்கை சான்றிதழ் கோரி நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கிய சென்னை ஐகோர்ட், படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்று வழங்க வேண்டும் என தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டது. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனவரி 11ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படலாம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு உள்ளதாக தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது, மேல் முறையீட்டு மனுவாக தாக்கல் செய்தால் வரும் திங்கட்கிழமை அன்று மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தணிக்கை வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்தின் ரிலீசிற்கு அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தணிக்கை வாரிய வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் இந்த மேல்முறையீட்டு மனுவும் ரத்தானால் டிவிஷன் பெஞ்சில் தணிக்கை வாரியம் முறையிட வாய்ப்புள்ளது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் செல்லவும் அதிக வாய்ப்புள்ளது. இதனால் படம் எப்போது ரிலீசாகும் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலேயே கேவிஎன் தயாரிப்பு நிறுவனமும் அனைவருக்கும் பணத்தை திருப்பி தருவதாக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.