எங்களை மன்னிச்சுடுங்க...மெளனம் கலைத்த ஜனநாயகன் தயாரிப்பாளர்
சென்னை : நடிகர் விஜய்யின் கடைசி படமாக எதிர்பார்க்கப்படும் 'ஜன நாயகன்' படத்தின் வெளியீடு தணிக்கை வாரியச் சிக்கல்கள் மற்றும் நீதிமன்றத் தடை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
வீடியோவில் பேசி உள்ள ஜனநாயகன் பட தயாரிப்பாளர், படத்தின் மீது மிகுந்த அன்பு காட்டிய ரசிகர்களுக்கும், ஒத்துழைப்பு கொடுத்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும், வெளியீடு தாமதமானதற்காக மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டார். 2025 டிசம்பர் 18 அன்று படம் தணிக்கை வாரியத்திடம் (CBFC) சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 22 அன்று, சில மாற்றங்களுடன் படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. தயாரிப்பு தரப்பு உடனடியாக அந்த மாற்றங்களைச் செய்து மீண்டும் சமர்ப்பித்தது.
படம் ஜனவரி 9 அன்று வெளியாகத் தயாராக இருந்த நிலையில், ஜனவரி 5 அன்று ஒரு புகாரின் அடிப்படையில் படம் 'மறுஆய்வு குழுவிற்கு' (Revising Committee) அனுப்பப்படுவதாக தணிக்கை வாரியம் அறிவித்தது. இது தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.தங்களுக்கு வேறு வழியில்லாததால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியதாகவும், நீதிமன்றம் முதலில் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட போதிலும், தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கினார்.
"தசாப்தங்களாக ரசிகர்களின் அன்பையும், திரையுலகின் மரியாதையையும் பெற்ற தளபதி விஜய் அவர்களுக்கு,அவர் தகுதியான ஒரு மிகச்சிறந்த பிரியாவிடை கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.இந்தத் தாமதங்கள் அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் நிகழ்ந்தவை என்றும், சட்டத்தின் மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போது இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், பொங்கல் பண்டிகைக்குப் படம் வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது. ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள், படத்தின் ரிலீஸ் தள்ளி போய் உள்ளது பற்றி இதுவரை படக்குழு தரப்பில் யாரும் வாய் திறக்காமல் இருந்த நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பாளரே வீடியோ வெளியிட்டுள்ள விஜய் ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.