இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. காயத்தால் அவதிப்படும் பும்ரா.. புது வைஸ் கேப்டனாக வரப் போவது யாரு?
மும்பை: இங்கிலாந்துடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்குப் பதில் புதிய துணை கேப்டன் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ராவுக்கு காயம் இருப்பதால் அவர் தொடர் முழுவதும் விளையாட வாய்ப்பில்லை. எனவே அவருக்குப் புதிய துணை கேப்டனை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பும்ராவுக்குப் பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவருக்கு துணை கேப்டன் பொறுப்பு கிடைக்கலாம். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுப்மன் கில்லுக்கு 25 வயதும், ரிஷப் பண்ட்டுக்கு 27 வயதும் ஆகிறது.
ஜூன் 20 முதல் இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. துணை கேப்டனாகவும் இருக்கிறார். ஆனால் காயம் காரணமாக இந்தப் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. பும்ரா ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். ஆனால், இங்கிலாந்தில் நடக்கவுள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் அவர் முழுமையாக விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. காயம் காரணமாக அவரை முழுமையாக பயன்படுத்த மாட்டார்கள் என்று தெரிகிறது.
காயம் காரணமாகவே பும்ரா ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை. அவர் சிட்னி டெஸ்ட் போட்டியின்போது காயம் அடைந்தார். அதனால் மூன்று மாதங்கள் விளையாடாமல் இருந்தார். இந்தியா சாம்பியன்ஸ் டிராபி வென்றபோதும் அவர் விளையாடவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரின் முதல் பாதியிலும் அவர் விளையாடவில்லை. பும்ராவுக்கு ஏற்கனவே முதுகு வலி, வயிற்று வலி மற்றும் விரல் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் முக்கியமான போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.
இங்கிலாந்து தொடர் தொடர்பாக கிரிக்கெட் வாரிய வட்டாரத்தில் கூறுகையில், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடக்கூடிய ஒரு வீரரை நாங்கள் விரும்புகிறோம். அவருக்கே துணை கேப்டன் பதவி கொடுக்கப்படும். பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாடமாட்டார். அதனால், வெவ்வேறு போட்டிகளுக்கு வெவ்வேறு துணை கேப்டனை நியமிக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு விரைவில் துணை கேப்டனை தேர்வு செய்யவுள்ளது. தற்போது உள்ள வீரர்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் 30 வயதை கடந்தவர்கள். அதனால், பிசிசிஐ இளம் வீரர்களை தேடுகிறது. தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தும் சுப்மன் கில் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவருக்கு துணை கேப்டனாகும் வாய்ப்பு கிடைக்கும்.