பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை!
Nov 09, 2026,03:11 PM IST
- ஜெயபாரதி மதிவாணன்
மேகத்தில் பூவையும், யானையின் தந்தத்தில் வாழைப்பூவையும், மானின் கொம்பில் வாழைத்தண்டையும் கண்டவர்கள் நம் பழந்தமிழர்கள்! இயற்கையை வெறுமனே பார்த்தவர்கள் அல்லர்; அதன் அழகை நுணுக்கமாக ரசித்து, ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுக் கற்பனை செய்தவர்கள். அவர்களின் ரசனையைப் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள். அதனால், அவர்கள் காணும் ஒவ்வொரு பொருளும் மற்றொரு இயற்கைப் பொருளை நினைவூட்டியது. அந்த ஒப்புமைகளில் அவர்களின் நுண்ணிய பார்வையும் அழகியல் ரசனையும் வெளிப்படுகின்றன.
வெண்மையான மேகத்தின் தோற்றம், மழைக்காலத்தில் பூக்கும் அவரைப் பூவைப் போலவும், கொட்டைகளை நீக்கி வெட்டியெடுத்த பஞ்சைப் போலவும் இருக்கிறதாம். இத்தகைய உவமை சங்க இலக்கியப் பாடலில் காணப்படுகிறது. சற்றே கற்பனை செய்து பாருங்கள்! வானில் தவழும் வெண்மையான மேகம், அவரைக் கொடியில் பூத்துக் குலுங்கும் வெள்ளை மலர், மென்மையான வெண்பஞ்சு! என்ன ஓர் அழகான வர்ணனை!
புலியுடன் போரிட்ட யானையின் வெண்மையான தந்தத்தில் இரத்தம் தோய்ந்திருப்பதைப் போல, வாழைப்பூவின் கூர்மையான நுனி காட்சியளிக்கிறதாம். வாழைப்பூவை வாங்கும்போதெல்லாம் எனக்கு இந்த உவமை மனக்கண்ணில் காட்சியாக விரியும்!
பல மடல்களை உதிர்த்துவிட்ட பிறகு காணப்படும் வாழைப்பூவின் தண்டைப் போன்ற தோற்றம் கொண்டதாம் மானின் முறுக்கேறிய கொம்பு. இயற்கையில் காணப்படும் இரண்டு வெவ்வேறு பொருட்களை இவ்வளவு நுட்பமாக ஒப்பிட்டுப் பார்ப்பது எத்தனை வியப்பானது!
நாமும் கடையில் வாழைப்பூ வாங்குகிறோம். அதை மடல் மடலாக உரித்து, குழம்பு வைக்கிறோம்; கோலா உருண்டை செய்து சுவைக்கிறோம். ஆனால், அதை உற்றுப் பார்த்து இத்தகைய கற்பனைகள் நமக்குத் தோன்றியிருக்கின்றனவா?
இயற்கையைப் பார்ப்பது வேறு; இயற்கையின் அழகை ரசிப்பது வேறு! பழந்தமிழர்கள் இயற்கையை ரசித்ததோடு மட்டுமல்லாமல், தங்கள் கற்பனை வளத்தால் அதற்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார்கள். அவர்களின் இலக்கியங்கள் இதற்குச் சான்றாக விளங்குகின்றன.
(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர். கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்)