கொக்குக் கூட்டம் – வானில் தவழும் முத்துமாலை!
- ஜெயபாரதி மதிவாணன்
நீல வானில் வெண்ணிறக் கொக்குகள்! ஒன்றன் பின் ஒன்றாக, அழகிய ‘V’ வடிவத்தில் அவை சிறகடித்துப் பறந்து செல்லும் காட்சியைக் கண்டிருக்கிறீர்களா? இயற்கை வரைந்த ஓர் அழகிய ஓவியம் போலத் தோன்றும் அந்தக் காட்சியில் வெறும் அழகு மட்டுமல்ல; வியக்க வைக்கும் அறிவியலும், ஒற்றுமையின் பாடமும் பொதிந்திருக்கின்றன!
நாம் ஊருக்குப் பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்யும்போது, வானில் ‘V’ வடிவத்தில் வெண்கொக்குகள் பறந்து செல்வதைப் பார்க்கிறோம். அவை ஏன் அப்படி அணிவகுத்துப் பறக்கின்றன என்பதற்கு அறிவியல் அறிஞர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
‘V’ வடிவத்தில் பறக்கும்போது, முன்னால் செல்லும் பறவை காற்றின் எதிர்ப்பைச் சமாளிக்க அதிக ஆற்றலைச் செலவிடுகிறது. அதன் பின்னால் பறக்கும் பறவைகளுக்கு ஏற்படும் காற்றின் எதிர்ப்பு குறைவதால், அவை குறைந்த ஆற்றலைச் செலவிட்டுப் பறக்க முடிகிறது. முன்னால் செல்லும் பறவை களைப்படையும்போது, அது பின்னால் சென்று விடுகிறது. வேறொரு பறவை முன்னால் வந்து தலைமை ஏற்றுப் பறக்கிறது. இவ்வாறு ஒன்றுக்கொன்று உதவிக்கொண்டு பறக்கும் இந்த இயல்பை இன்றைய அறிவியல் விளக்குகிறது.
இத்தகைய பறவைகளின் அணிவகுப்பையும் அழகையும் பழந்தமிழ்ப் புலவர்களும் வியந்து ரசித்திருக்கிறார்கள்!
ஔவையார், நாரைகள் ஒழுங்காக வளைந்து வரிசையாய்ப் பறந்து செல்வதைக் கண்டு வியக்கிறார். கூதள மலர்களால் தொடுத்த மாலையை யாரோ ஒருவர் வானில் வேகமாக வீசியெறிந்தால் அது எப்படித் தோன்றுமோ, அப்படி அந்தப் பறவைகளின் அணிவகுப்பு இருந்ததாக வர்ணிக்கிறார்.
நக்கீரர், வானில் வரிசையாகச் செல்லும் வெண்பறவைகளின் தோற்றத்தை, சேயோன் எனப்படும் முருகப்பெருமானின் செம்மாந்த மார்பில் புரளும் முத்தாரத்துக்கு ஒப்பிடுகிறார்.
என்ன அழகான கற்பனை! இயற்கையின் ஓர் எளிய காட்சியைப் பார்த்து, அதில் மலர் மாலையையும் முத்தாரத்தையும் கண்ட தமிழ்ப் புலவர்களின் ரசனைதான் எத்தனை உயர்ந்தது!
வானில் பறக்கும் கொக்குக் கூட்டம் வெறும் பறவைகளின் அணிவகுப்பு மட்டுமல்ல; அது பழந்தமிழரின் கற்பனைத் திறனையும், இயற்கையை நுணுகி ரசித்த அவர்களின் பார்வையையும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
அழகோ அழகு! வியப்போ வியப்பு!
(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர். கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்)