தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திருவாரூர்!

Su.tha Arivalagan
Oct 13, 2026,02:20 PM IST

- ஜெயபாரதி மதிவாணன், விருதுநகர்


பறவைகள் வலசை போதல் (Migration) என்பது காலங்காலமாக நடந்து வருகின்றது. நாம் இப்போது ரசித்துப் பார்ப்பதைப் போல, அக்கால மக்களும் ரசித்துப் பார்த்திருக்கிறார்கள்.


சுந்தரர் காலத்தில் திருவாரூரில் நீர்நிலைகள் அதிகமாக இருந்ததையும், அவற்றில் செங்கால் நாரைகள் வந்து தங்கியதையும் தேவாரப் பாடல் மூலம் அறியலாம்.


“தினைத்தாள் அன்ன செங்கால்

நாரை சேரும் திருவாரூர்”


என்று சுந்தரர் பாடுகிறார். தினைத்தண்டைப் போன்ற கால்களைக் கொண்ட செங்கால் நாரையை ரசித்துப் பாடி, ஈசனை வணங்குகிறார். (தினை என்பது நவதானியங்களுள் ஒன்று. வள்ளி தினைப்புனம் காக்கும்போதுதான் முருகனைச் சந்தித்தாள் என்பது புராணம். இப்போதுள்ள இளம் தலைமுறையினர் இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.)


செங்கால் நாரையைப் பார்த்தால் நாம் ரசிப்போம். எங்கள் விருதுநகரிலும், பொதுவாகத் தென்மாவட்டங்களிலும், நமது தமிழக மாநில மரமான பனைமரங்கள் அதிகமாக உள்ளன. பனங்கிழங்கும் அதிகமாகக் கிடைக்கும். அது நல்ல சத்துகள் நிறைந்த உணவாகும்.




நாம் பனங்கிழங்கைப் பார்த்தால் வாங்கி, வேகவைத்து, அதன் தோலையும் நாரையும் உரித்துச் சாப்பிடுவோம். வேறு எதுவும் நமக்கு நினைவுக்கு வராது.


ஆனால், சத்திமுற்றப் புலவருக்குச் செங்கால் நாரையைப் பார்த்ததும் பனங்கிழங்கு நினைவுக்கு வருகிறது!


“நாராய்! நாராய்! செங்கானா ராய்!

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய்ச் செங்கானாராய்!”


என்று நாரையின் கூர்மையான அலகைப் பிளந்த பனங்கிழங்குக்கு ஒப்பிட்டு, தன் மனைவியிடம் தூது அனுப்புகிறார்.


முத்தொள்ளாயிரத்தில் ஓர் அற்புதமான பாடல்:


“செங்கால் மடநாராய்!

தென்உறந்தை சேரியேல்

நின் கால் மேல் வைப்பன் என்

கை இரண்டும் – நன்பால்

கரை உறிஞ்சி மீன் பிறழும்

காவிரி நீர் நாடற்கு

உரையாயோ யான் உற்ற நோய்!”


சிவந்த கால்களை உடைய அழகிய நாரையே! உயர்ந்த கரைகளில் மோதி, மீன்கள் துள்ளி விளையாடும் காவிரி ஆறு பாய்ந்தோடும் உறையூரில் வாழும் சோழன் மீது நான் கொண்டுள்ள விருப்பத்தை எடுத்துச் சொன்னால், உன் கால்களின் மீது என் இரு கைகளையும் வைத்து வணங்குவேன் என்று தலைவி சோழனிடம் தூதாக அனுப்புகிறாள்.


பனங்கிழங்கை நான் சாப்பிடும்போதெல்லாம், செங்கால் நாரையும் சத்திமுற்றப் புலவரும் என் நினைவுக்கு வருவார்கள். இனி உங்களுக்கும் அப்படித்தானே!


(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர்.  கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்)