அறுவை!

Su.tha Arivalagan
Oct 12, 2026,04:21 PM IST

- ஜெயபாரதி மதிவாணன்


என்ன, பெயரே இப்படி இருக்கிறது? கட்டுரையும் ஒரே அறுவையாக இருக்குமோ என்று பயப்பட வேண்டாம்!


அறுவை, துகில், கலிங்கம், காழகம், சிதார், சீரை, பூ வேலைப்பாடுகள் அமைந்த ஆடை, தழைகளாலான உடை, தழைகளாலும் பூக்களாலும் ஆன உடை, பழந்துணி, புதுக்காழ்ப்போர்வை, புதுமடி போன்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் ஆடைகளைக் குறித்தன.


இப்போது பலவிதமான ஆடைகளைப் பல டிசைன்களில் உடுத்துகிறோம். அப்போதும், அதாவது சங்க காலத்திலும், விதவிதமான ஆடைகளை அணிந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது.


கரிகாலன், தன்னைப் பாட வந்த பொருநர்களுக்கு, இழைநூல் சென்ற வழியைக் காண இயலாத அளவுக்கு நுண்ணிய வேலைப்பாடு கொண்ட ஆடையை வழங்கினான். பாம்பு தன் சட்டையைக் கழற்றிச் செல்வது போன்ற மென்மையான, சருகு போன்ற ஆடையாக அது இருந்தது. கரிகாலன் புலவர்களுக்கு, இப்போது நாம் அணியும் பட்டுவேட்டி, பட்டுச் சேலைகளில் இருப்பதைப் போன்ற முடிச்சுகளுடனும் அகன்ற கரையுடனும் கூடிய ஆடையையும் வழங்கியிருக்கிறான்.


ஓய்மான் நல்லியக்கோடன், தன்னைக் காண வந்த பாணர்களுக்கு, மூங்கில் குழாய்க்குள் இருக்கும் மெல்லிய, ஒளி பொருந்திய தகடு போன்ற ஆடையை வழங்குகிறான். தொண்டைமான் இளந்திரையன், பாணர்களுக்குப் பாலாவி போன்ற நூலால் செய்த ஆடையை வழங்குகிறான்.




நன்னன், தன்னை அணுகி வந்த கூத்தர்களுக்கு, இழை சென்ற இடத்தை அறிய இயலாத அளவுக்கு நுண்ணிய நூலால் செய்த கலிங்கத்தை அளிக்கிறான்.


மதுரை நகரத்தில் வாழ்ந்த செல்வர்கள், மாலை நேரத்தில் சிவந்து காணப்படும் வானத்தை ஒத்த நிறமுடைய பூ வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.


அக்காலத்தில் சட்டையும் அணிந்திருந்தார்கள். ‘படம்’ என்ற சொல் சட்டையைக் குறித்தது. ‘படம்புக்கு’ என்பதற்கு ‘சட்டையிட்டு’ என்று நச்சினார்க்கினியர் உரை எழுதுகிறார். ‘படம் புகும் மிலேச்சர்’ என்ற முல்லைப்பாட்டு தொடர் இதனைச் சுட்டுகிறது. பிற்காலத்திலும் சட்டையை ‘மெய்ப்பை’ என்று கூறினர்.


‘புகை முகந்தன்ன மாசு இல் தூ உடை’ என்பது புகை போன்ற மெல்லிய, குற்றமற்ற, அழுக்கில்லாத தூய்மையான ஆடையைக் குறிக்கிறது.


அரசன், கஞ்சியிட்டு சலவை செய்யப்பட்ட ஆடையை அணிந்திருந்தான் என்பதை ‘சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்’ என்ற மதுரைக்காஞ்சி தொடர் கூறுகிறது. அப்போதே கஞ்சியிட்டு, இஸ்திரி செய்து ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்! நாம் மட்டும்தான் இப்போது நேர்த்தியாக ஆடை அணிகிறோம் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால், இது எவ்வளவு பழமையான வழக்கம்!


அரசி, அரசனுடன் இருக்கும்போது பூ வேலைப்பாடுகள் கொண்ட ஆடையை அணிந்திருந்தாள். எம்பிராய்டரி செய்யும் கலை அப்போதே தெரிந்திருந்திருக்கிறது!


அரசன் இல்லாதபோது, அதாவது அவன் வேட்டைக்கோ போருக்கோ சென்றிருக்கும்போது, அரசி நூலால் செய்த ஆடையை அணிந்திருந்தாள்.


அரசனைக் காணச் செல்லும் பாணர்கள், பொருநர்கள் போன்றோர் அழுக்கேறிய கந்தல் ஆடைகளை அணிந்திருந்தனர். அவற்றைச் ‘சிதார்’, ‘சிதர்வை’ என்று குறிப்பிடுகின்றனர்.


குறிஞ்சிப்பாட்டில் தலைவி தழையாடை அணிந்தது தெரிகிறது. திருமுருகாற்றுப்படையில் குறமகள் தழையாடை அணிந்தது குறிப்பிடப்படுகிறது. காவிரிப்பூம்பட்டினத்தில் பரதவர் சேரிப் பெண்கள் தழையாடை அணிந்திருந்ததைப் பட்டினப்பாலை கூறுகிறது.


எத்தனை விதமான ஆடைகள்! சங்க காலத்திலேயே ஆடை வடிவமைப்பிலும், வேலைப்பாடுகளிலும், அணியும் முறைகளிலும் இவ்வளவு சிறப்புகள் இருந்திருக்கின்றன!


(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர்.  கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்)