பூம்பூம் மாடு வளர்ப்பவர்களுடன் 'காணும் பொங்கல்' கொண்டாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Su.tha Arivalagan
Jan 17, 2026,06:17 PM IST
சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்கள் பூம்பூம் மாடு வளர்ப்பவர்களுடன் இணைந்து உற்சாகமாக கொண்டாடினார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட பூம்பூம் மாடு வளர்ப்பவர்களை வர வழைத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அவர்களைக் கௌரவித்தார்.அவர்களுக்கு புத்தாடைகள் (வேட்டி, சேலை), குளிருக்குத் தேவையான சால்வைகள் மற்றும் பண உதவிகளை வழங்கினார்.அவர்களுடன் அமர்ந்து மனம் விட்டுப் பேசிய முன்னாள் அமைச்சர், அவர்களின் வாழ்வாதாரம் குறித்துக் கேட்டறிந்தார்.



இந்த சந்திப்பின் போது பூம்பூம் மாடு வளர்ப்பவர்கள் ஜெயக்குமார் அவர்களிடம் பேசுகையில், "ஒரு மாட்டிற்குத் தீவனம் வழங்கவே தினமும் ரூ.250 வரை செலவாகிறது. பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்; அரசு தரப்பிலிருந்தும் உதவிகள் கிடைக்க வேண்டும்" எனத் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும் அவர்களின் கோரிக்கைகளை மற்றும் தேவைகளையும் கேட்டறிந்தார்.

அவர்களின் கோரிக்கைகளைக் கேட்ட ஜெயக்குமார், "உங்களது கலை மற்றும் பாரம்பரியம் அழிந்துவிடக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், உங்களது அடுத்த தலைமுறை குழந்தைகள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அவர்கள் IAS, IPS போன்ற உயரிய பதவிகளுக்கு வர வேண்டும். அதற்கு முறையான கல்வியே மிக அவசியம்" என உருக்கமாக அறிவுறுத்தினார். தங்கள் முன்னோர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்களில் நடித்திருப்பதாகக் கூறி, பூம்பூம் மாடு வளர்ப்பவர்கள் ஜெயக்குமாருடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.



சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களைத் தனது வீட்டிற்கே அழைத்து, கௌரவப்படுத்தி, அவர்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வழிகாட்டிய ஜெயக்குமாரின் இந்தச் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பும் சென்னையில் மழை, வெள்ளம் ஏற்பட்ட போது அந்தந்த பகுதிகளுக்கு வண்டிகளில் உணவு எடுத்துச் சென்று வழங்கியதுடன், பலருக்கும் வேண்டிய உதவிகளையும் ஜெயக்குமார் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை மாணவர்களின் கல்விச் செலவுகளுக்குத் தனிப்பட்ட முறையில் உதவுவதுடன், உயர்கல்வியின் அவசியத்தைப் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், ஜெயக்குமார். மீன்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, மீனவர்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தினார். ராயபுரம் தொகுதியில் ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருந்த போது, அப்பகுதி மக்களின் குடிநீர், சாலை வசதி மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்தினார். தற்போது பதவியில் இல்லாவிட்டாலும், சமூகப் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.