மனிதனின் இரு பக்கங்கள்: பலமும் பலவீனமும்

Su.tha Arivalagan
May 21, 2026,04:32 PM IST

- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா


வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே புரிந்து கொள்வது மிக முக்கியமான ஒரு விஷயம். நம்மிடம் இருக்கும் நல்ல குணங்கள் என்ன, நாம் மாற்றிப் கொள்ள வேண்டிய குறைகள் என்ன என்று சிந்திப்பதே ஒரு சிறந்த சுயபரிசோதனை ஆகும். 


நம்மை உயர்த்தும் நற்குணங்கள் 


ஒரு மனிதனைச் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் வைப்பது அவனுடைய நல்ல குணங்கள் தான். உண்மை பேசுவதும் , நேர்மையாக இருப்பதும் நம் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன், உண்மையோடு செய்வதுதான் மனப்பூர்வமான உழைப்பு.


அதோடு மட்டும் இல்லாமல், நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பாகவும், கருணையோடும் பழக வேண்டும். யாரிடமும் பகைமை பாராட்டாமல் நட்போடு பழகுவதும், சோதனையான காலங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பதும் மிக முக்கியம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு இலக்கை நோக்கித் தளராமல் ஓடுவதற்குத் திண்ணிய நெஞ்சம், அதாவது உறுதியான மனநிலை அவசியம். இந்த எட்டு குணங்களும் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது.


நாம் வெல்ல வேண்டிய பலவீனங்கள் 




நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, மனிதர்களாகிய நமக்கும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதைக் கண்டறிந்து திருத்திக் கொள்வதில்தான் நம் வளர்ச்சி இருக்கிறது.


அதில் முதலாவது கோபம். "தன்னைக் காக்கின் சினம் காக்க" என்பார்கள்; கோபம் நம் அறிவை அழித்துவிடும். அடுத்ததாக, மற்றவர்களிடம் கடினமாக நடப்பது, அதாவது முரட்டுத்தனம் நமக்குக் கெட்டப் பெயரைத் தரும். மற்றவர்கள் வளர்வதைக் கண்டு பொறாமைப்படுவது நம் நிம்மதியைக் கெடுக்கும்.


பரந்த மனப்பான்மை இல்லாமல் குறுகிய எண்ணத்தோடு இருப்பது மற்றும் சூழ்நிலைக்குப் பயந்து பொய் பேசுவது நம் மீதான மரியாதையைக் குறைத்துவிடும். ஒரே முடிவில் நில்லாமல் அடிக்கடி மனம் மாறுவது எந்த ஒரு செயலிலும் வெற்றியைத் தராது. இறுதியாக, "நான் தான் எல்லாவற்றிலும் சிறந்தவன்" என்ற தலைக்கனம், அதாவது அகந்தை நம் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடும்.


யாரும் பிறக்கும் போதே முழுமையானவர்களாகப் பிறப்பதில்லை. நம்மிடம் இருக்கும் உண்மை, நேர்மை, பொறுமை போன்ற நல்ல குணங்களை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் கோபம், பொறாமை, அகந்தை போன்ற தேவையற்ற குணங்களை மெல்ல மெல்ல நம்மை விட்டு விரட்ட வேண்டும். இந்த சுயபரிசோதனையைத் தொடர்ந்து செய்து வந்தாலே, நாம் நினைத்ததை விட ஒரு சிறந்த மனிதனாக வாழ்க்கையில் நிச்சயம் உயர முடியும்.