Motivational Story: இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்

Su.tha Arivalagan
Apr 08, 2026,04:49 PM IST

- புரட்சிப் பாவை தே.ஜெனிட்டா ரீனா


புத்தகத்தோடு பயணிப்பவன் புத்திசாலி, புத்தகத்திலே இருப்பவன் சாதனை சாலி." இந்த இரண்டுமாக நான் மாற விரும்புகிறேன். 


திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டைதான் எனது சொந்த ஊர். எனது தந்தை தேவசகாயம் கிழங்கு வியாபாரத்தில் இருந்து புஷ்ப கமிஷன் கடை அதிபராக உயர்ந்தவர். தாயார் பிரிட்டோமேரி, இவரும் கிழங்கு விற்று பின் விவசாய வேலை பார்த்து ஒரு ஏக்கர் விவசாய நிலம் வாங்கி இன்றும் விவசாயம் செய்து வரும் உழைப்பின் சிகரப் பெண்மணி. 


எனக்கு சிறுவயது முதலே படிப்பில் ஆர்வம் அதிகம்; அதற்கு காரணம் என் பெற்றோர் ஆரம்பக் கல்வி மட்டுமே கற்றவர்கள். நாங்கள் படிக்கவில்லை என்றாலும் எங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற தீராத ஆசை அவர்களுக்கு இருந்தது. நான் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை புனித சிறுமலர் துவக்க பள்ளியில் படித்தேன். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை புனித லொயோலா உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். 


ஆரம்பக் கல்வியில் தரவரிசை பத்துக்குள் வருவேன். பின் கல்வி ஒன்று மட்டுமே என் குடும்பத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் சக்தி என்பதை உணர்ந்து உயர்கல்வியில் முதல் ஐந்து தரவரிசைக்குள் வந்தேன். என் அப்பா முதல் மதிப்பெண் பெற்று முதல் தரவரிசை பெற வேண்டும் என்று என்னிடம் அடிக்கடி கூறுவார். அதை நான் என் பத்தாம் வகுப்பில் மூன்றாம் இடைத்தேர்வில் நனவாக்கினேன். 


பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 381 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் நான்காம் இடம் பிடித்தேன். தமிழில் முதல் மதிப்பெண் 91 பெற்றதால் என் பள்ளி என் பெற்றோரை அழைத்து ஒரு பெரிய பாத்திரம், ஐந்து கிலோ சர்க்கரையுடன் கொடுத்ததை நினைத்து மிகவும் பெருமையாக என் அம்மா என்னிடம் கூறினார். நான் அப்போது திரவியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமலாபுரத்தில் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன்.  அதைக் கேட்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 




நான் சயின்ஸ் குரூப் எடுத்து படித்தேன். நான் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 938 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தை பெற்றேன். நான் மருத்துவராக வேண்டும் என்ற ஆசையை என் பெற்றோரிடம் கூறினேன்; அதற்கு என் தந்தை, "நீ மூத்த பெண், உனக்கு பின் தங்கை தம்பி இருக்கின்றனர். உன்னை மருத்துவம் படிக்க வைக்க அதிக பணம் செலவாகும், அதற்கு நான் சம்பாதித்த அனைத்தையும் விற்க வேண்டும். உன் தங்கை தம்பியையும் நான் படிக்க வைக்க வேண்டும்" என்றார். 


அரசு மருத்துவ கல்வி பற்றிய புரிதலும் வழிகாட்டுதலும் என் பெற்றோருக்கு இல்லை. என் தந்தை, "நான் உன்னை ஆசிரியர் பயிற்சிக்கு படிக்க வைக்கிறேன்" என்றார். நானும் என் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு புனித மைக்கேல் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2001 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை படித்தேன். என்பதை விட பல பயிற்சிகள் பெற்று நான் சிறந்த ஆசிரியராக திகழ கற்றுக் கொண்டேன். நாடகம், வினாடி வினா, நடனம், பொறுப்பு ஆசிரிய மாணவிகளின் உடல்நலம், பணியிடை பயிற்சி தயாரிப்பு போன்ற பல தகுதிகளை வளர்த்துக் கொண்டேன்.


நான் ஆசிரியர் பயிற்சியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது விடுதி சாப்பாட்டு பணம் ரூபாய் 600-ல் இருந்து விலைவாசி உயர்வை காரணம் காட்டி ரூபாய் 1000 என்று என் முதல்வர் அருட்சகோதரி யூப்ரசி அவர்கள் கூறினார்கள். அதைக் கேட்டவுடன் நான், "இப்பொழுது 600 ரூபாய் உடன் செலவு சேர்த்து 1000 ரூபாய் ஆகிறது; ஆனால் 1000 ரூபாய் சாப்பாடு பணம் என்றால் செலவோடு சேர்த்து எப்படியும் 1500 ரூபாய் செலவாகும்" என்று எண்ணினேன். எனவே முதல்வரை சந்தித்து எங்களின் நிலைமையை எடுத்துக் கூறினேன்.  அப்போது அனைத்து மாணவிகள் முன்னிலையிலும், "ரீனாவால் மட்டும் விடுதி சாப்பாட்டு பணம் ரூபாய் 1000 கட்ட முடியாதா? இல்லை உங்களாலும் கட்ட எத்தனை பேரால் முடியாது?" என்று கேட்டார். அதற்கு அனைத்து ஆசிரியர் பயிற்சி மாணவிகளும் பெரும்பாலானோர் கை தூக்கினர். உடனே முதல்வர் சற்று யோசித்து விட்டு விலைவாசி உயர்வால் உங்களுக்காக ரூபாய் 750 மாத சாப்பாட்டு பணமாக குறைக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். அதைக் கேட்டதும் அனைவரும் மகிழ்ச்சியில் முதல்வருக்கு நன்றி கூறினோம்.


பின் விடுதியில் வந்ததும் என்னை அனைவரும் தூக்கி, "ரீனா மிகவும் நன்றி. நீ கேட்டதால்தான் இது சாத்தியம்; நாங்கள் முதல்வரிடம் கேட்க தயங்கியதை நீ தைரியமாக பேசினாய்" என்று பாராட்டினார்கள். உன்னால் மாற்றம் கொண்டுவர முடியும் என்றால் முயற்சி செய்ய வேண்டும் என்பதை நான் வாழ்க்கையில் அன்று புரிந்து கொண்டேன். முயன்றால் முடியாதது இல்லை; முயன்றிடு; முனைந்திடு. ஆசிரியர் பணி அனுபவம்ஆசிரியர் பயிற்சியில் 962 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடம் பிடித்தேன். பின் அனுமந்தராயன் கோட்டை லெயூகா அருட் சகோதரிகள் நடத்தும் இரு பாலர் பள்ளியில் எல்கேஜி வகுப்பு ஆசிரியராக மூன்று மாதம் பணியாற்றினேன். பின் இராமநாதபுரம் மாவட்டம் சருகணியில் நடுநிலைப்பள்ளியில் விடுதி காப்பாளராக ஆறு மாதம் பணியாற்றினேன். பின் திருத்துறைப்பூண்டியில் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் விடுதியின் காப்பாளராக ஆறு மாதம் பணியாற்றினேன். 


வாடிப்பட்டியில் உள்ள சார்லஸ் உயர்நிலைப் பள்ளியில் மூன்று மாதம் பணியாற்றினேன். சென்னையில் பால மந்திர் வித்யாலயா பள்ளியில் ஒரு ஆண்டு பணியாற்றினேன். 


2006ம் ஆண்டு நவம்பர் 27 நாள் திருமணம் முடிந்து கணவர் ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் பணிபுரிந்ததால் சென்னைக்கு வந்தேன். 2009 ஆம் ஆண்டு என் மகளுக்கு ஒன்றரை வயதில் எனக்கு அரசு ஆசிரியர் பணி வேலூர் மாவட்டம் நெமிலி ஒன்றியம் வேப்பேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பணியாணை பெற்றேன். ஈராசிரியர் பள்ளியாக இருந்ததால் நிர்வாகப் பணிகளை கற்றுக் கொண்டேன். 2012 ஆம் ஆண்டு இரண்டாவது மகன் மகப்பேறு விடுப்பில் அரக்கோணம் ஒன்றியம் மோசூர் தொடக்கப்பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றேன். 


ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருந்ததால் கற்றல் கற்பித்தல் அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது. மாணவர்கள் ஆர்வமுடன் பல கலைகளை கற்றுக் கொண்டனர். நான் மாணவர்களின் நடனத்திற்கு நாட்டுப்புறப் பாடலை தேர்ந்தெடுப்பேன். தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்த கற்றுக் கொண்டேன். நான் 2015 ஆம் ஆண்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இராமநாதபுரம் பணி மாறுதல் பெற்றேன்.  இதுவும் ஒரு ஈராசிரியர் பள்ளி; இதன் மூலம் தலைமை பண்பை வளர்த்துக் கொண்டேன். நான் கற்றல் விளைவுகள் தலைப்பில் அறிவியல் கருத்தாளராக முதன்முதலாக ஆசிரியர்களுக்கு வகுப்பு எடுத்தேன். என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள தாவரங்களை காட்சிப்படுத்தியதைக் கண்டு சக ஆசிரியர்கள் ஆச்சரியப்பட்டனர். 


நான் ஒரு விவசாய குடும்பத்தின் மகள், பின் தான் நான் ஒரு ஆசிரியர் என்று கூறினேன். எனக்கு அனைத்து விவசாய வேலைகளும் தெரியும். 2018 ஆம் ஆண்டு கடம்பத்தூர் ஒன்றியம் வேப்பஞ்செட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பணிமாறுதல் பெற்றேன். நான் Leap forward மூலம் அளித்த English - Phonics என் மாணவர்களுக்கு சிறப்பாக கற்பித்ததால் என் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பூவிருந்தவல்லி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலநல்லூருக்கு பணி மாறுதல் பெற்று சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் போது அதை சரியாக பயன்படுத்துபவன் புத்திசாலி. 


SCERTயில் வளர்திறன் பயிற்சிக்கு திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டதில் நானும் ஒருத்தி. ஐந்து நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில் கல்வியாளர் ராஜேந்திரன் அய்யா அவர்களின் வகுப்பு என்னை மெருகேற்றியது. ஆன்லைன் மூலம் ஓரிகாமி (காகிதமடிப்பு கலை) கற்றுக் கொண்டு மாணவர்களுக்கும் கற்பித்தேன். எண்ணும் எழுத்தும் பயிற்சியில் ஐந்து முறை மாவட்ட கருத்தாளராக பங்கு பெற்றேன். நான் பள்ளியில் மாணவர்களுக்கு உடல்நல ஆரோக்கியத்தின் பொறுப்பு ஆசிரியராக இருந்து ஊட்டச்சத்து மாத்திரைகளையும் வழங்கும் பணியையும் செய்து வருகிறேன். அரசு பள்ளி கல்வித்துறை நடத்தும் கலைத் திருவிழா போட்டி குழுவில் என்னைத் தலைமை ஆசிரியர் நியமித்துள்ளார். 


டெலகிராம் இணையவழிக்குழுவில் "Picture of the day"-ல் என் மாணவர்களின் வகுப்பறை செயல்பாடுகள் அதிக அளவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கல்வி 40 ஆர்கனைசேஷன் நடத்திய பட்டிமன்றத்தில் பேசியது என்னுள் இருக்கும் பேச்சாளரை கண்டுபிடிக்க உதவியது. என்னை விட பன்முகத்திறமையான மாணவர்களாக என் மாணவர்களை உருவாக்குவதே என் வாழ்வின் நோக்கம். 


(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராகவும் வலம் வருகிறார்)