நகைப் பெட்டி!
- பா. பானுமதி
ராதிகா நகைக் கடையில் வேலை பார்க்கிறாள். கை நிறைய சம்பளம், பொறுப்பான வேலை. சிறப்பான வாழ்க்கை. வரவுக்கு மேலே செலவு செய்வதில்லை. சிறு துளி பெரு வெள்ளம் போல சேமிப்பு உண்டு.
நாட்கள் நன்றாகத் தான் நகர்ந்து கொண்டிருந்தது, ஒரு முறை அவள் தோழி வீட்டுக்கு வந்திருக்க வரவேற்பு அறையில் உள்ள அலமாரியில் இரண்டு மூன்று நகை பெட்டிகள். அதனைப் பார்த்து தோழி அழகாக இருக்கிறது இந்த பெட்டிகள். இதில் என்ன இருக்கிறது என்று கேட்க என்ன இருக்கும் நகை தான் என்று பதில் சொன்னாள் ராதிகா. தோழிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. உடனே எல்லோரிடமும் பரப்பி விட்டாள்
மற்றொரு முறை உறவுக்கார பெண் ஒருத்தி வீட்டுக்கு வர அவளுக்கு குங்குமம் தர பூஜை அறைக்கு அழைத்துச் சென்றாள் ராதிகா. அங்கு மூன்று நான்கு நகை பெட்டிகள். அதை பார்த்து அவளும் ஆச்சரியத்தில் தன்னை மறந்து பார்த்தாள். பின்பு உறவுக்காரர்களுக்கு எல்லாம் ஒளிவு மறைவு இன்றி சொல்லிவிட்டாள்.
இப்படியே விஷயம் ஊரெல்லாம் பரவ ஒரு நாள் ஒரு விசேஷ வீட்டுக்கு வெளியூர் சென்றிருந்தார்கள் குடும்பத்துடன். அந்த நேரம் பார்த்து திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து விட்டார்கள். முதலில் வரவேற்பு அறையில் உள்ள நகை பெட்டிகளை திறந்து பார்க்க அதில் அழகிய நகைகள். பின்பு பூஜை அறை சமையலறை என்று எல்லா இடத்திலும் இருந்த நகை பெட்டிகளை அள்ளி சாக்குப் பையில் கட்டிக்கொண்டு சந்தோசமாக போய்விட்டார்கள்.
வரவேற்பு அறையில் நகைப்பெட்டியில் இருந்தது கவரிங் நகைகள். பூஜை அறையில் இருந்த பெட்டிகளில் பூஜை பொருட்கள், சமையலறையில் இருந்த நகை பெட்டியில் சமையல் பொருட்கள், அழகிய நகைப் பெட்டிகள் கொண்டு வந்து தனக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்வாள் ராதிகா. அதை அறியாத திருடர்கள் ஆனந்தத்தோடு சென்றார்கள்.
அடுத்த நாள் தான் தெரியும்... ராதிகாவா கொக்கா!
(கவிஞர் பா. பானுமதி, ஆசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர். மதுரையைச் சேர்ந்தவர்)