பளிங்கர்கள்.. ஜோ இது உனக்கு தேவையா??!
- ஜோசப் சாம்ராஜ்
மே மாத விடுமுறையில் வாசுதேவநல்லூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலைப் பளிங்கர்களை சந்தித்து பேசலாம் என்றும் அங்கு அவர்களுடன் ஒரு நாள் தங்கி விட்டு வரலாமா என்று கேட்டார் ராஜியக்கா. அவர் அந்த மாதிரி மலை பகுதியில் உள்ள ஆலயங்களுக்கு அடிக்கடி செல்வதாக கூறுவார்.
நான் அந்தமான் போயிருந்த போது ஜாவர் மக்களை பற்றி அறிந்து கொண்டுள்ளேன். இப்போதும் அவர்கள் ஆபத்தானவர்கள் தான். அரசு அனுமதி பெற்று அவர்கள் குடியிருப்பு சென்று ஒரு சில நிமிடங்கள் பார்த்து விட்டு வந்து விடவேண்டும்.
உலகம் ஆரம்பித்த காலத்தில் வாழ்ந்த மக்களை சந்திப்பது என்பது ஒரு வியப்பான விஷயம் தானே. அதுபோல்தான் இப்போது இவர்கள் வாழ்வியல் முறைகளும். அரசு இவர்களது குழந்தைகள் படிப்பதற்காக அந்த பகுதியில் உண்டு உறைவிடப் பள்ளியும் உள்ளது.
நாங்கள் ஒருநாள் மாலை சூரியன் மறைவதற்கு முன்பாக மலையேறி அவர்கள் குடியிருப்பு சென்றோம். ஆங்காங்கே வீடுகளில் ஒரு சிறிய பல்பு மட்டும் தான் எரிந்தது. கொண்டு போன பண்டங்களை பகிர்ந்து கொடுத்தோம். கூடி பாடல் பாடினோம். நல்ல சுவையான உணவு கொடுத்தார்கள். அதன் பின்னர் வீட்டிற்கு முன்புரமாக பாயை விரித்து படுத்தோம்.
அழகான நிலவு தெரிந்தது. சுற்றிலும் பெரிய பெரிய, திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள தூண்கள் போல மரங்கள் இருந்தது. காற்று வீசும் போது இலைகள் அசையும் சத்தம் ரொம்ப கனமாக இருந்தது. கும் இருட்டு. ஏதோ ஒரு ம் சத்தம் ஆழமாக இருந்தது. எதுவும் ஊர்ந்து வருமா என்று கேட்டேன். வள்ளி பாட்டி வாத்யாரே எதுவும் வராது நாங்கள் இருக்கிறோம் என்று தைரியம் கூறினார். ஆனாலும் தூக்கம் வர தவித்தது.
எல்லார் வீடுகளிலும் முன்னால் நல்லா தூங்கி கொண்டு இருந்தார்கள். என் அருகில் மூன்று நாய்களும் தூங்கிகொண்டு இருந்தன. நடுஜாமம் எதோ ஒரு சத்தம். லேசாக கண்ணை திறந்தேன். என் அருகில் இருந்த மரத்தில் இலைகளை சாப்பிட்டு கொண்டு இருந்தது ஒரு காட்டு யானை.
நெஞ்சம் நின்று விட்டது. அவ்வளவு தான் இன்னும் கொஞ்ச நேரத்தில் சட்னி தான் என்று நினைத்துக் கொண்டேன். டேய் ஜோ இது உனக்கு தேவையா என்று என்னை நானே கேட்டுக் கொண்டே அருகில் இருந்த வரை எழுப்பி ஊமை பாஷையில் காட்டினேன். அது ஒன்றும் செய்யாது என்று அவரும் பதிலுக்கு ஊமை பாஷையில் பதிலளித்தார்.
உண்மை தான். அது இலைகளை சாப்பிட்டு விட்டு அசைந்து அசைந்து மலை பக்கம் போய்விட்டது. இயேசப்பா நன்றி என்று சொல்லி கொண்டே கண் அயர்ந்தேன். சூரியன் சுளீர் என்று அடித்தபிற்கே எழுந்தேன்.
இரவில் யானை வந்த கதைகள் பேசிவிட்டுக் கிளம்பினோம். போகும்போது ஐந்து லிட்டர் காட்டுதேன் கொடுத்தார்கள். அதையும் பெற்றுக்கொண்டு அடிக்கடி வருகிறோம் என்று சொல்லி விட்டு மலை இறங்கினோம். மனசெல்லாம் அந்த இரவுக் காட்சி கம்பளிப்பூச்சி ஊர்ந்து செல்வது போல என் மனசுக்குள் எப்போதும் ஊர்ந்து கொண்டு செல்கிறது.
(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)