Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!

Su.tha Arivalagan
Sep 22, 2026,04:52 PM IST

- ஜோசப் சாம்ராஜ்


"ஜோ.. வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க. செம்பை எடுத்துட்டு போய் பாண்டி கடையில் தேநீரும், சூடா இரண்டு சுருள் பூரியும் வாங்கிட்டு வாடா," என்று ஆண்டிச்சி அம்மாவின் குரல் கேட்டது.


"போமா... நீ போய் வாங்கிட்டு வாமா. நான் 'செதுக்குமுத்து' விளையாடணும்," என்று குரலை உசத்தி சொல்லிவிட்டு, காலரை ரிலாக்ஸாக எடுத்து விட்டு, வட்டத்தில் உள்ள முத்தை நோக்கித் தனது செதுக்குக் கல்லை குறிபார்த்து எறிந்தான்.


முத்து சிதறியது! அதேநேரம் அவனது முதுகிலும் ஒரு குத்து விழுந்தது. திரும்பிப் பார்த்தால் அம்மா!


வேற என்ன பண்ண? மடித்து விட்ட டவுசரைக் கீழே இழுத்து விட்டு, "குமாரு, ஐந்து நிமிடத்தில் சிட்டா வந்து விடுகிறேன்," என்று சொல்லி விட்டு, சிகரெட் அட்டை சொருகப்பட்ட 'அம்பர்' மிதிவண்டியை எடுத்துக்கொண்டு பறந்தான்.




"தம்பி, சூடா இரண்டு உளுந்தவடை வாங்கிட்டு போ!" என்று பாண்டி சொல்லியதை 'நோ' சொல்லாமல், அதையும் மஞ்சள் பையில் வாங்கிக்கொண்டு லாவகமாக மிதிவண்டியைத் திருப்பினான். ஒரு கையால் ஹேண்டில்பாரைப் பிடித்துக்கொண்டு, மறு கையால் செம்பைப் பிடித்துக்கொண்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்து கொடுத்துவிட்டு, மீண்டும் விளையாட்டை ஆட வந்தான்.


அவனுடைய ஆட்டம் வரும் வரை பொறுமையாகக் காத்திருந்தான். அவனது ஆட்டம் வருவதற்குள் மழைத்துளி விழ ஆரம்பித்தது.


அம்மாவின் குரல் மீண்டும் ஒலித்தது. "காய்ச்சல் வரப்போகுது, வீட்டுக்குள் வா!" என்று சப்தம் கேட்டது.


"ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளாவது நிம்மதியாக விளையாட முடியலையே..." என மழையைச் சபித்துக்கொண்டு உள்ளே வந்தான்.


மழையோடு சேர்ந்த இடிசப்தம் தூரத்தில் கேட்டது.


"கடவுளே... அடுத்த ஞாயிறு நல்ல ஞாயிறாக இருக்க வேண்டும்," என்று ஜீசஸைப் பார்த்து வேண்டிக்கொண்டு, கூரையிலிருந்து சொட்டுச் சொட்டாகத் தரையில் விழும் நீர்த்துளிகளைப் பார்த்துக்கொண்டு இருந்தான் ஜோ.


(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)