அழியாத நினைவுகள் அந்தமான்!
- ஜோசப் சாம்ராஜ்
அந்தமான் செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் 'கிங்பிஷர்' விமான டிக்கெட் பெற்றுக்கொண்டு காக்பிட்ல காத்திருந்தேன்.
ஒலிபெருக்கியில் விமானம் கிளம்பும் தகவல் வந்த பின்னர், நம்மையும் நம் உடைமைகளையும் முழுச்சோதனைக்குப் பிறகு, மஞ்சள் வண்டியில் ஏற்றி விமானம் அருகில் நிறுத்தப்பட்டு படியேறி, நமது எண் இருக்கையில் அமர்ந்த உடன் அழகான சிவப்பு நிற ஏர்ஹோஸ்டஸ் உதவியுடன் சீட்பெல்ட் மாட்டிய சிறிது நேரத்தில் தண்ணீர் குடித்துவிட்டு ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது, மிகப்பெரிய கழுகின் இறக்கை போல அலுமினிய இறக்கை தெரிந்தது.
புறப்படத் தயார்நிலையில் ரன்வேயில் ஓடி மெதுவாக மேலே ஏறும்போது வயிறு கொஞ்சம் கலங்கிய பிறகு, சென்னை மற்றும் மெரினா கடற்கரை மற்றும் வானுயர்ந்த கட்டிடங்கள் சிறிய புள்ளியாக மாறி வெண் பஞ்சு மேகமூட்டம் நடுவில் சென்றபோது சுவையான தேநீர், பிஸ்கட் கொண்டுவந்து தந்தார்கள். ருசித்து குடித்து முடித்த சற்று நேரத்தில் 'போர்ட் பிளேயரை' வட்டமிட்டு இறங்கியது.
நம் ஊரைப் போலத்தான் அந்தமான். தமிழர்கள்தான் அதிகம் வாழ்கின்றனர். முதல் நாள் ஓய்வெடுத்த பிறகு, முதலில் சென்றது ரோஸ் தீவு. ஆங்காங்கே தீவுகள் செல்ல, குட்டிக் கப்பல். நாம் செல்லவேண்டிய காரையும் ஏற்றிக்கொண்டு "பூம்" என்ற சப்தத்துடன் கடல் அலைகள் மீது ஒய்யாரமாகச் செல்கிறது.
கடல் பயணம் நம்மை பிரமிக்க வைக்கும். ரோஸ் தீவில் பழங்காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் வேர்களால் கட்டிடங்கள் முழுவதும் பரவிக் கிடந்தது ஆச்சரியமாக இருக்கிறது.
மாலை நேரத்தில் கடற்கரை மணலில் கைப்பந்து விளையாடி கண் பார்க்கும் இடமெல்லாம் நம் ஊரில் ஆடுகள் திரிவது போல, மான்கள் கூட்டம் கூட்டமாக திரிகிறது.
மறுநாள் "செக்கிழுத்த செம்மல் வ.உ.சி." இருந்த அந்தமான் சிறை சென்று பார்த்தபோது நம் நாட்டின் விடுதலைக்காக சிறை சென்றவர், இருட்டு அறையில் வாழ்ந்த நிலைகண்டு நெஞ்சு பதறியது.
இரவு ஒலி ஒளி காட்சியில் சிறை ஜொலித்தது. வரும் வழியில் இருபது ரூபாய் நோட்டில் பின்புறம் இருக்கும் மலைப்பகுதியை, ரசித்துவிட்டு நகர்வலம் வந்தேன்.
மறுநாள் நம்மை வியக்க வைக்கும் அந்தமான் பழங்குடியினர், ஆதிவாசி மக்கள் பார்க்க அரசு அனுமதி பெற்று, அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பொருட்கள் கொடுத்துவிட்டு, கண்களால் பேசிவிட்டு, புறப்பட்டு வேறு சில தீவுகளை மற்றும் கடற்கரை மணலில் உள்ள பவளபாறைகள் கண்டு களித்துவிட்டு, எங்கெங்கும் வான் உயரத்தில் நின்ற பாக்கு மரங்களிடம் விடைபெற்று, 'மீண்டும் அடுத்த தடவை கப்பலில் வருவேன்' என்று மனதில் நினைத்து கொண்டே, மீண்டும் 'கிங்பிஷர்' ஏறினேன்.
சிறிய புள்ளியாக அந்தமான் தெரிந்தது. நீண்ட நாட்கள், அங்கு பழகிய நண்பர்கள் மற்றும் நம் பயணமும் நெஞ்சில் அழியாத பொக்கிஷமாக நிற்கும்!
(கட்டுரையாளர் த.ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33 வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைப்பேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்.)