சீலா மீனும்.. ஜோ தீபாவளியும்!

Su.tha Arivalagan
Nov 09, 2026,12:43 PM IST

- ஜோசப் சாம்ராஜ்


தீபாவளி! 


வெடிச்சத்தம் கேட்கப் பிடிக்காமல் மதிய உணவு எடுத்துக் கொண்டு சாத்தூர் பைபாஸ் சாலையில் பாலத்தின் அடியில் வண்டியைத் திருப்பினேன். 

 

தன் புத்தம் புதிய மனைவிக்கு வண்டி ஓட்ட ஒருவர் பயிற்சி கொடுத்துக் கொண்டு இருந்தார். திரும்பி, கொஞ்ச தூரத்தில் ஒரே வண்ணச் சட்டை அணிந்த மூன்று இளைஞர்கள் டிசைன் டிசைனாக தங்கள் ஒட்டக வண்டியை நிறுத்தி, புகைப்படங்கள் கிளறிக்கொண்டே இருந்தனர். 


மூங்கில் மரம் தாண்டி, வண்டியை நிறுத்தினேன். சிவப்பு தாடி வைத்துள்ள வான்கோழிகள் 'ப்ளாக் ப்ளாக்' கத்திக்கொண்டே தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லியது. நான் வந்ததைக் கண்டுகொள்ளாமல் தாய்க்கோழி தன்குஞ்சுகளுடன் புல்வெளியில் இரை தேடிக்கொண்டு இருந்தது. 




கொண்டு போன உணவான 'சீலா மீனை' வாழை இலையில் சுற்றி அவித்ததால், செமயாக இருந்தது; தூத்துக்குடி 'பிரேமா மெஸ்' மீனைவிட பிரமாதம். எங்கள் பள்ளியில் படித்த ஷீலா ஞாபகம் வந்தது. குண்டத்தூரில் இருந்து, சில நேரங்களில் சிவப்பு வண்ண மிதிவண்டி அல்லது 'ஜெயவிலாஸ்' பேருந்தில் வந்து இறங்கிவருவாள். 'காந்தி நிகேதன்' பள்ளியில் அவள் வரவைக் காண ஒரு கூட்டம் காத்திருக்கும். 


கடையில் கூட சீலா மீன் விலை தான் அதிகம். மதிய உணவு உண்டுவிட்டு தோட்டத்தில் காலாற நடந்தேன். பாட்டி, தாத்தாவுக்கு புத்தாடை கொடுத்து அணியக் கூறினார். லேப்ரடார் நாய் எனை பார்த்து வாலாட்டியது. 


தாத்தா பாட்டிகிட்ட தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு அவர்களிடம் கதை பேசினேன். 


ஆந்திராவில் எலும்பு கம்பெனியில் வேலை பார்த்த கதையைக் கூறினார். ஆச்சரியமாக இருந்தது. யானை, மாட்டெலும்பை பவுடர் ஆக்கும் வேலை பற்றி கூறினார். 


தீபாவளிப் பரிசைக் கொடுத்துவிட்டு ராஜாவுக்கு அருகில் இருவர் சாமரம் வீசுவார்களே! அந்தப்பூவை பறித்து, காரில் முன்பகுதியில் வைத்துவிட்டு அருகில் உள்ள 'வெள்ளை யானை' தேநீர் கடையில் ஒரு லெமன் டீ பருகிவிட்டு, இரவு குடும்பமாக சேர்ந்து 'செந்தூர் கார்டனில்' வாணவேடிக்கை நடத்தினோம். மனசு மத்தாப்பு போல ஜொலித்தது.


(கட்டுரையாளர் த.ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33 வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைப்பேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்.)