பகிரங்க கொலை மிரட்டல் .. தேமுதிக நிர்வாகியை கைது செய்ய பத்திரிகையாளர்கள் கோரிக்கை

Su.tha Arivalagan
Feb 11, 2026,09:54 AM IST

சென்னை: பத்திரிகையாளர்களை வீடு புகுந்து தாக்குவேன் என்று பகிரங்கமாக மேடையில் நின்று பேசிய தேமுதிக நிர்வாகியைக் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்  அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:


தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் அம்பத்தூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 




அப்போது, மேடையில் பேசிய விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த நிர்வாகி மாரி, "கோவம், கோவமா வருது; ஜெயில் எல்லாம் எனக்கு புதுசு கிடையாது; கட்சிக்காக மூணு தடவை போயிருக்கேன்; ஏற்கனவே பத்திரிகையாளரை அடிச்சுதான் ஜெயிலுக்கு போனோம்; தாஸ் அண்ணன் கூட தான் ஜெயில்ல இருந்தேன்; ரொம்ப கோவம் வருது; சரியில்லை, திருத்திக்கோங்க , திருந்துங்க, ரொம்ப டென்ஷன் ஆகுது, அப்புறம் வீடு புகுந்து அடிக்கிற சூழல் வந்துடும்" என பேசியுள்ளார்.


மாரியின் இந்த அராஜக பேச்சை தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காம் தூணாக இருந்து இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களை மிரட்டியதுடன், வீடு புகுந்து தாக்குவேன் என்று கூறிய மாரி, பத்திரிகையாளரை தாக்கி சிறைக்கு செல்வது தனக்கு வாடிக்கையான ஒன்று தான் என்பதையும் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். 


அதனால், கொலை முயற்சி உள்ளிட்ட தகுந்த பிரிவுகளில் மாரி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.