திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
மதுரை: மடப்புரம் கோவில் ஊழியர் அஜித்குமார் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவம், மடப்புர பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார். இவர் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில், விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட நிலையில், அஜித்குமார் மரணம் அடைந்தார். இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் காவல்துறைக்கு நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். நகை திருட்டு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்?. யாருடைய உத்தரவினால் வழக்கு தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. தனிப்படையினர் யார் சொல்லி, எதன் அடிப்படையில் இந்த வழக்கை கையில் எடுத்தனர். புலனாய்வு செய்வதற்கு தான் காவல்துறை. அடிப்பதற்கு எதற்கு காவல்துறை? காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக வேலை செய்கிறதா? கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தை உடனே இடமாற்றம் செய்ய என்ன காரணம்? அதிக கல்வியறிவு கொண்ட மாநிலமான தமிழகத்தில் இப்படி நடப்பது ஏற்கத் தக்கது அல்ல. நீதித்துறை நடுவர் உடனே விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று மாலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், வீடியோ தாக்கல் செய்த சக்தீஸ்வரன் என்பவரையும் இன்று மாலை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். போலீசார் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.