தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்: முடிவுக்கு வந்த சகாப்தம்
தமிழ் திரையுலகில் திரைக்கதை என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கே.பாக்யராஜ். சாதாரண மனிதர்களின் வாழ்வியலை, எதார்த்தமான நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியுடன் திரையில் காட்டி, 1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர். இவரது திடீர் மறைவு ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியிலும், மீளா சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அறிமுகம் :
ஈரோடு மாவட்டம் வெள்ளங்கோவிலில் 1953-ஆம் ஆண்டு ஜனவரி 7 அன்று பிறந்தார் பாக்யராஜ். சினிமா மீது கொண்ட அலாதி பற்றின் காரணமாக சென்னைக்கு வந்த இவர், இயக்குனர் சிகரம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகத் தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார். '16 வயதினிலே' மற்றும் 'கிழக்கே போகும் ரயில்' ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும், வசன கர்த்தாவாகவும் பணியாற்றித் தன் திறமையை நிரூபித்தார்.
திரைக்கதை மன்னனின் அசுர வளர்ச்சி:
1979-இல் வெளியான 'சுவரில்லாத சித்திரங்கள்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், கே.பாக்யராஜ். அதைத்தொடர்ந்து, அவர் இயக்கிய திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றின. ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, சின்ன வீடு, இது நம்ம பூமி, ராசுக்குட்டி போன்றவை இவரது இயக்கத்தில் வெளியான மெகா ஹிட் படங்கள் ஆகும். குறிப்பாக, 1983-இல் வெளியான 'முந்தானை முடிச்சு' திரைப்படம் திரையரங்குகளில் பல நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்ததுடன், இவருக்குப் பெரும் புகழையும் தேடித் தந்தது.
வெற்றிகரமான சுட்டி நாயகன் :
இயக்குனராக மட்டுமின்றி, ஒரு நடிகராகவும் ரசிகர்களின் மனதை வென்றார் பாக்யராஜ். 1977ம் ஆண்டு 16 வயதினிலே படத்தில் சிறிய ரோலில் நடித்து திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானார் பாக்யராஜ். அதற்கு பிறகு 1979ம் ஆண்டு புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பெரிய உடற்கட்டோ, மாஸ் ஹீரோ பிம்பமோ இல்லாத போதிலும், தனது தனித்துவமான வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழியால் மக்களைக் கவர்ந்தார். தான் இயக்கிய படங்கள் மட்டுமின்றி, அன்புள்ள ரஜினிகாந்த், நான் சிகப்பு மனிதன் போன்ற பிற முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.பிற்காலத்தில் பாரிஜாதம் (அவரே இயக்கியது), துப்பறிவாளன், முப்பரிமாணம் மற்றும் பல வெப் சீரிஸ்கள், திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து முத்திரை பதித்தார். இவர் கடைசியாக 2025ம் ஆண்டு வெளியான குபேரா, பிபி 180 ஆகிய வெப்சீரிஸ்களில் நடித்திருந்தார். தற்போது டார்க் ஜெயின்ட் என்ற சைக்கலாஜிக்கல் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை :
பாக்யராஜ் 1981ம் ஆண்டு நடிகை பிரவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1983ம் ஆண்டு மஞ்சகாமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர் இறந்த பிறகு, 1984-ஆம் ஆண்டு பிரபல நடிகை பூர்ணிமா ஜெயராமை (பூர்ணிமா பாக்யராஜ்) திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகனும் உள்ளனர். சாந்தனு பாக்யராஜ் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக வலம் வருகிறார்.
விருதுகளும் அங்கீகாரமும் :
திரைக்கதை அமைப்பில் இவருக்கு நிகர் இவரே என்று போற்றப்படும் பாக்யராஜ், சிறந்த சிறந்த வசன கர்த்தா மற்றும் இயக்குனருக்கான பல மாநில அரசு விருதுகளையும், பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார். ‘பாக்யா’ என்ற வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி, இலக்கிய உலகிலும் தன் முத்திரையைப் பதித்தார்.
எளிய மனிதர்களின் காதலை, குடும்பப் பிரச்சினைகளை சுவாரசியமான திருப்பங்களுடன் சொல்வதில் பாக்யராஜ் ஒரு ஜீனியஸ். சாமானிய மக்களின் உணர்வுகளை தனது படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் மூலம் வெளிக்காட்டி, எளிய மக்களின் மனதிலும் இடம்பிடித்தவர் பாக்யராஜ். இவரது இந்த திடீர் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.