பசும்பொன்னில் ஒன்றாக சேரும் ஓபிஎஸ், செங்கோட்டையன், தினகரன்... அடுத்து என்ன?

Su.tha Arivalagan
Oct 30, 2025,12:37 PM IST

பசும்பொன் : பசும்பொன்னில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்று சேர உள்ளதாகவும், அதிரடியாக பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதை உறுதிப்படுத்தும் வகையில் ஓபிஎஸ்ஸும், செங்கோட்டையனும் ஒரே காரில் பசும்பொன்னுக்குப் புறப்பட்டுப் போயுள்ளனர். இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது நினைவு தினம், குரு பூஜையாக இன்று அனுசரிக்கப்படுகிறது. பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே காரில் செல்லும் போட்டோக்கள் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. பசும்பொன்னில் மூவரும் ஒன்றாக அஞ்சலி செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.




பசும்பொன்னில் அஞ்சலி செலுத்திய பிறகு ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து, ஒரே அணியாக ஒன்றிணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு மூவரும் சேர்ந்து சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


அதிமுக.,வில் முக்குலத்தோர் சமூகத்தின் முக்கிய முகங்களாக பார்க்கப்படுபவர்கள் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர். இவர்களுடன் தற்போது, அதிமுக ஒன்றிணைய  வேண்டும் என கூறி வரும் செங்கோட்டையனும் ஒன்றைவதால் முக்குலத்தோர் சமூக வாக்குகளை ஒன்றிணைக்க இவர்கள் திட்டமிடலாம் என சொல்லப்படுகிறது.


ஏற்கனவே வன்னிய சமுதாயத்தினருக்கு, கடந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தின் கடைசியில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இது தென் மாவட்டங்களில் பரவலாக பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர் சமூகத்தினரை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. இந்த அதிருப்திதான் அதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் பெரும் தோல்வியைக் கொடுக்கக் காரணமாகவும் அமைந்தது. இந்த அதிருப்தி இன்று வரை நீடித்தும் வருகிறது. இந்த நிலையில் செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து ஓ.பி.எஸ் உள்ளிட்டோருடன் கை கோர்த்தால் அது எந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.