Political Update: அதிமுக டூ தவெக.. விஜய்யை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்!

Su.tha Arivalagan
Nov 26, 2025,06:01 PM IST

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று மாலை தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய்யை அவரது பட்டினப்பாக்கம் இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.


விஜய்யை சந்தித்ததைத் தொடர்ந்து செங்கோட்டையன், தவெகவுக்கு வருவது உறுதியாகி விட்டது.


கடந்த 50 வருட காலத்திற்கும் மேலாக அதிமுகவில் செயல்பட்டு வந்தவர் செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து 9 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் இடம் பெற்றவர். அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். 




அதிமுக பொதுச் செயலாளராக தற்போது இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அவர் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது செயல்பாடுகள் உற்றுநோக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.


 மேலும் அவரை அமைச்சர் பி.கே.சேகர்பாபு 2 முறை சந்தித்துப் பேசியதால் புதிய பரபரப்பும் ஏற்பட்டது. ஆனால் செங்கோட்டையன் தனது நிலையில் உறுதியாக இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அவர் தவெகவில் இணைகிறார். அவர் இன்று மாலை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டுக்கு வருகை தந்தார். அங்கு தவெகவின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரும் உள்ளனர். விஜய், செங்கோட்டையனை வரவேற்று அழைத்துச் சென்றார்.


கட்சியில் செங்கோட்டையனுக்கு கொடுக்கப் போகும் பதவி உள்ளிட்டவை குறித்து பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான செங்கோட்டையன், விஜய்யுடன் கை கோர்ப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், தவெகவில் இணையும் முதல் முக்கியமான அரசியல் தலைவர் செங்கோட்டையன்தான் என்பதால் பிற கட்சிகளும் இதை உற்று நோக்கி வருகின்றன. இனிமேல் தவெகவின் செயல்பாடுகளில் புதிய பாய்ச்சல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.