எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நாளை தவெகவில் சேருகிறாரா?

Su.tha Arivalagan
Nov 26, 2025,12:01 PM IST

கோவை : கோபிசெட்டிப்பாளையம் தொகுதி சட்டசபை உறுப்பினர் பதவியை இன்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ராஜினாமா செய்துள்ளார். நாளை அவர் தவெகவில் சேரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அதை இன்னும் செங்கோட்டையன் உறுதிப்படுத்தவில்லை.


முன்னதாக, கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்த கொள்ள வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம், தவெக.,வில் இணைய போகிறீர்கள் என்ற தகவல் பரவிக் கொண்டிருக்கிறதே, அது உண்மையா என கேட்டனர். இதற்கு மிக சுருக்கமாக செங்கோட்டையன் பதிலளித்து விட்டு நகர்ந்து விட்டதால், அரசியல் வட்டாரத்தில் இன்னும் குழப்பம் அதிகரித்தது. இந்த நிலையில்தான் இன்று அவரது ராஜினாமா முடிவு வந்துள்ளது.


தலைமைச் செயலகத்திற்கு இன்று காலை அதிமுக கொடி கட்டிய காரில் வந்த செங்கோட்டையன், சட்டசபை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது விலகல் கடிதத்தைக் கொடுத்தார். 




சமீபத்தில் அதிமுக கட்சி தலைமைக்கு கெடு விதித்ததற்காக செங்கோட்டையனின் கட்சி பொறுப்புக்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த மாதம், பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள சென்ற செங்கோட்டையன், அதிமுக.,வில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, அமமுக தலைவர் டிடிவி. தினகரன் ஆகியோருடன் ஒரே காரில் சென்றார். இதனால் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.


அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தான் மன வேதனையில் இருப்பதாக மட்டும் செங்கோட்டையன் பேட்டி அளித்து விட்டு, அதற்கு பிறகு அமைதி காத்து வந்தார். இதற்கிடையில் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ., பதவியையும் விரைவில் ராஜினாமா செய்ய போவதாகவும், அவர் விஜய்யின் தவெக.,வில் சென்று இணைய போவதாகவும் மீடியாக்களில் கடந்த இரண்டு நாட்களாக செய்தி பரவி வந்தது. இந்நிலையில் கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த செங்கோட்டையனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 


அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், "கட்சிக்காக பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்த எனக்கு கிடைத்த பரிசு கட்சியில் இருந்து நீக்கப்பட்டது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இருக்கக் கூடாது என நீக்கியது எவ்வளவு மன வேதனையாக இருக்கும் என்பது உங்களைப் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும். அப்படி தாங்க முடியாத மன வேதவையில் நான் இருக்கிறேன்" என்று மட்டும் கூறி விட்டு சென்று விட்டார். தவெக.,வில் இணைவது குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் ஆம் என்று ஒப்புக் கொள்ளவோ அல்லது இல்லை என்று மறுக்கவோ இல்லை.


ஆனால் அவர் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்பது தெரிகிறது. இதன் வெளிப்பாடாக அவர் தவெக பக்கம் செல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றே சொல்லப்படுகிறது. தனக்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதற்காக, தவெக.,பக்கம் அவர் செல்லலாம் என்றே சொல்லப்படுகிறது.


கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 9 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் செங்கோட்டையன். கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் அதிமுக முகமாக இருந்தவர் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. ஜெயலலிதாவின் நம்பிக்கைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர். பல முக்கிய அமைச்சர் பொறுப்புகளை வகித்துள்ளார். அதிமுகவிலும் பல்வேறு பதவிகளை வகித்தவர். தற்போது அவரிடமிருந்த கடைசி அதிமுக அடையாளமும் இந்த விலகல் மூலம் பறி போயுள்ளது.