புரட்சிப் பெண்ணே!
Mar 08, 2026,04:20 PM IST
- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி
அடுப்பங்கரைச் சாம்பலில் பூத்த மலரல்ல நீ!
ஆகாயத்தை அளக்க வந்த அக்கினி சிறகு!
அடக்குமுறைத் தளைகளை உடைத்தெறிந்து - ஒரு
அதிசயப் புயலாய் உருவெடுத்த வீரமங்கை !
விழிநீர் சிந்திக் காலங்கள் கழிந்தது போதும், என
விழித்துக் கொண்டு புதுயுகம் படைத்தவள் நீ!
அச்சம் ,மடம் ,நாணம், பயிர்ப்பு என்பவை,
அழகிய விலங்குகள் என்பதை நீ அறிவாய்!
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை- என
பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் அடையாளம் நீ!
கல்வி எனும் கடலினை நீ நீந்திவிட்டால்,
வையகமே உன் காலடியில் மண்டியிடும்!
தடைகளை நீ படிக்கற்களாக மாற்றினால்,
வெற்றி சிகரத்தினை தொடுவது எளிது!
வாழும் காலத்தின் சரித்திரம் நீயே !
புரட்சிப் பெண்ணே, உனக்கு என் வந்தனங்கள்!
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)