பெண் கலெக்டர் புகார் : நீதிபதி சரமாரி கேள்வி...வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை : கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிற்கு எதிராக அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் நீதிபதி லட்சுமி நாராயணன் சரமாரி கேள்விகளை எழுப்பியதுடன், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரம் கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. அது போன்ற எஸ்எம்எஸ்.,ஐ தான் அனுப்பவில்லை என கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுத்திருந்தார். இந்நிலையில் இது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கலெக்டர் தரப்பில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் ஜான் சத்யன் வாதிட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மற்றும் தலைமை செயலாளர் பதிலளிக்க நீதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை மாதமே புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதி லட்சுமி நாராயணன், ஜூலை மாதமே நடவடிக்கை எடுத்திருந்தால் புகார் எழுந்திருக்காது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யார்? இந்த வழக்கை எஸ்பி அல்லாமல் அவருக்கு உயர் பதவியில் இருக்கும் ஜஜி அல்லது டிஜிபி கண்காணிப்பில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயற்சி செய்யாதீர்கள் என நீதிபதி மிக காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
இதற்கிடையில் இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும் என கள்ளக்குறிச்சி பெண் எம்எல்ஏ தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கு விசாரணையை ஐஜி பிரவீன்குமார் அகர்வால் கண்காணிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க ஏழு அதிகாரிகள் பெயர்களை நீதிபதி கூறி உள்ளதாகவும், அவருக்கு பதில் வேறு அதிகாரியின் பெயரை கூறுமாறு அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார். இதனால் இந்த வழக்கின் விசாரணை விறுவிறுப்படைந்துள்ளது.