கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவின் போது ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆற்றுத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஆற்றங்கரையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பலூன் கடை ஒன்றில், பலூன்களில் கேஸ் நிரப்பப் பயன்படுத்தப்பட்ட ஹீலியம் கேஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்த விபத்து நடந்த இடத்திலேயே சிறுவன் உட்பட 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து மணலூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசல் மிகுந்த திருவிழா காலங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த துயரமான செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.