கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்
சுமதி சிவக்குமார்
கள்ளக்குறிச்சி: இன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் 8 முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் அருகில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார், கள்ளக்குறிச்சி, வீரசோழபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.1774 கோடியில் முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவை,
# கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷீவிந்தியம் பகுதியில் ரூபாய் 6.5 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றியம் கட்டிடம் கட்டப்படும்.
# உளுந்தூர்பேட்டை அரசு கல்லூரிக்கு ரூபாய் 19 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும்.
# உளுந்தூர்பேட்டை பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 10 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
# திருக்கோவிலூர் அருகே ரூபாய் 5 கோடி மதிப்பிலான சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.
# கல்வராயன் மலைப்பகுதியில் மகளிர் விடியல் பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
# கள்ளக்குறிச்சியில் ரூபாய் 120 கோடியில் புதிய ஒருங்கிணைப்பு நீதிமன்ற வளாகம் , குடியிருப்புகள் கட்டப்படும்.
# சங்கராபுரம் அருகில் ரூபாய் 18 கோடியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
# சின்னசேலம் வட்டத்தில் ரூபாய் 3.9 கோடி மதிப்பில் புதிய தீயணைப்புத்துறை கட்டிடம் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.