Madurai Chithirai Thiruvizha: பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர். பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது முக்கியமான நிகழ்வாகும். இந்த ஆண்டு மதுரை அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா மே 8ம் தேதி தொடங்கியது. மே 10ம் தேதி கள்ளழகர் வேடமிட்டு அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார். பதினெட்டாம் படி கருப்பசாமியிடம் உத்தரவு பெற்று கள்ளழகர் மதுரைக்கு வந்தார்.
கள்ளழகருக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பல்வேறு மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மே 11ம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடேஷ பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மே 12ம் தேதி காலை 5.45 மணியளவில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி, ஆண்டாள் கொண்டை அணிந்து தங்க குதிரை வாகனத்தில் தல்லாகுளத்தில் இருந்து புறப்பட்டார். ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வேடமிட்டவர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வைகை ஆற்றில் கள்ளழகர் ஆடி வந்தார். ஏராளமான பக்தர்கள் சொம்பில் சர்க்கரை தீபம் ஏற்றி கள்ளழகரை வழிபட்டனர்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய பிறகு தேனூர் மண்டகப்படியில் எழுந்தருளுகிறார். அங்கு மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் உற்சவம் நடைபெறும். மே 13ம் தேதி தசாவதாரம் கோலத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி தருவார். மே 14ம் தேதி மோகினி அவதாரத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்துடன் எழுந்தருளுவார். மே 15ம் தேதி பூப்பல்லக்கில் கள்ளழகர் மதுரையில் இருந்து புறப்பட்டு மீண்டும் அழகர்மலைக்கு திரும்புவார்.