Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்

Su.tha Arivalagan
Sep 18, 2025,10:19 PM IST

சென்னை : உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நடிகர் ரோபோ சங்கருக்கு நடிகரும் எம்.பி.,யுமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் இருங்கல் தெரிவித்துள்ளார்.


உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 




"ரோபோ சங்கர் 

ரோபோ புனைப்பெயர் தான் 

என் அகராதியில் நீ மனிதன் 

ஆதலால் என் தம்பி

போதலால் மட்டும் எனை விட்டு 

நீங்கி விடுவாயா நீ? 

உன் வேலை நீ போனாய் 

என் வேலை தங்கிவிட்டேன். 

நாளையை எமக்கென நீ விட்டுச்

சென்றதால் 

நாளை நமதே."


என குறிப்பிட்டுள்ளார்.


நடிகர் ரோபோ சங்கர், கமல்ஹாசனின் தீவிர ரசிகர். சமீபத்தில் தனது மகள் இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, தனது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையுடன் சென்று கமலை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது கமல், ரோபோ சங்கரின் பேரனுக்கு நட்சத்திரன் என பெயரிட்டார். இதை மகிழ்ச்சியுடன், போட்டோவுடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோபோ சங்கரும், அவரது மகள் இந்திராஜாவும் பகிர்ந்திருந்தனர்.


ரோபோ சங்கர் மறைவுக்கு முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்: சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.